Raid : மாஜி அமைச்சர்களை ஏன் கைது பண்ணல.? திமுக களங்கத்தை துடைக்க ரெய்டா.? போட்டுத் தாக்கும் மாஜி எம்.பி.!

By Asianet TamilFirst Published Jan 22, 2022, 11:08 PM IST
Highlights

இதுவரை நடந்த ரெய்டுகள் மீது ஒரு கைது நடவடிக்கையும் இல்லையே. வேலுமணி மீது ரெய்டு பண்ணாங்க. சுகாதாரம் விஜயபாஸ்கர் மீது பண்ணாங்க.தங்கமணி மீது பண்ணாங்க. இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள். அப்புறம், இரண்டு பெரும் கை இருக்குதுல்ல, ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும். 

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான ரெய்டுகளுக்குப் பிறகு கைது நடவடிக்கை ஏன் இல்லை என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர்கள் மீது திமுக தொடர்ந்து ஊழல் புகார்களை கூறி வந்தது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என்று பல அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை திமுக  தொடர்ந்து கூறி வந்தது. அன்றைய ஆளுநரிடமும் ஊழல் புகார்களை திமுக அடுக்கியது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயும்; சிறையில் தள்ளப்படுவார்கள் என்று  திமுக தலைவரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் பிரசாரம்தோறும் சொல்லி வந்தார். திமுக ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் முதல் ரெய்டு நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எஸ்,பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர். கே.சி.வீரமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் என முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலும் அவர்கள் தொடர்புடைய இடங்களிலும் அதிரடியாக ரெய்டுகள் நடத்தப்பட்டன. அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவுகளையும் செய்தனர். ஆனால், இது வரை ஒரு முன்னாள் அமைச்சர் மீதும் கைது நடவடிக்கை பாயவில்லை. இந்த விஷயத்தில் அதிமுகவை பயமுறுத்தும் உத்தியை திமுக பின்பற்றுகிறது என்று ஆளுங்கட்சி மீது விமர்சனம் எழுந்து வருகிறது. தங்கள் ஆட்சி மீது மக்களுக்கு எழுந்துள்ள அதிருப்தியை மறைக்க இதுபோன்ற ரெய்டுகளை நடத்துவதாகவும் அதிமுகவை அழிக்க திமுக சதி செய்வதாக அதிமுகவும் விமர்சனம் செய்து வருகிறது.  

இந்நிலையில் திமுக அரசு ஏன் கைது நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் திமுக தன் களங்கத்தை துடைக்க ரெய்டு யுத்தியை பின்பிற்றுகிறதா என்றும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வெளியே ஊரறிந்த திமிங்கிலங்கள் எல்லாம் உள்ளன. அவர்கள் மீதெல்லாம் இன்னும் கைது நடவடிக்கை எடுக்காமல் வைத்திருக்கிறார்களே. இதுவரை நடந்த ரெய்டுகள் மீது ஒரு கைது நடவடிக்கையும் இல்லையே. வேலுமணி மீது ரெய்டு பண்ணாங்க. சுகாதாரம் விஜயபாஸ்கர் மீது பண்ணாங்க.தங்கமணி மீது பண்ணாங்க. இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள். அப்புறம், இரண்டு பெரும் கை இருக்குதுல்ல, ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும். பல குற்றச்சாட்டுகள் மீது நீதிமன்ற உத்தரவுகள் வந்துகொண்டே இருக்கு. ஆனால், ஒரு நடவடிக்கையும் எடுக்கலையே..இதெல்லாம் பார்க்கிறப்ப, மக்கள் என்ன நினைக்கிறாங்க என்றால், திமுக அரசாங்கம் செய்கிற ஊழல்களுக்கு, அவுங்க ஊழல் செய்கிறார்கள் என்று இவர்கள், இவுங்க ஊழல் செய்கிறார்கள் என்று அவுங்க என்று பேச்சு வருகிறது. இதனால், மக்களுக்கு இந்த திராவிட இயக்கங்கள் மீது சலிப்பு வருகிறது.” என்று கே.சி. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்,.

click me!