தமிழ்நாடு ஸ்டைலில் வட இந்தியாவில் பாய்ந்த வருமான வரித்துறை ! 60 இடங்களில் அதிரடி சோதனை !!

By Selvanayagam PFirst Published Apr 8, 2019, 7:22 AM IST
Highlights

மத்திய பிரதேச காங்கிரஸ்  முதலமைச்சர்  கமல்நாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் கோடிக்கணக்கான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

மத்தியில் ஆளும் பாஜக வருமான வரித்துறையை ஆயுதமாக பயன்படுத்தி எதிர்கட்சிகள் மீது ஏவிவிடுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் திமுக பொருளாளர் துரை முருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதே போல் தமிழகத்தில் பல இடங்களில் இது போன்ற சோதனைகள் நடைபெற்றன.

இந்நிலையில் நிலையில், கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் ‘ஹவாலா’ பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. அவர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதையடுத்து, நேற்று அதிகாலை 3 மணியளவில் கமல்நாத்துக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து வருமான வரி சோதனை தொடங்கியது. டெல்லி, மத்தியபிரதேச மாநில தலைநகர் போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் சுமார் 50 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில், சுமார் 300 வருமான வரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

குறிப்பாக, மத்தியபிரதேச முதலமைச்சர்  கமல்நாத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி பிரவீன் காக்கர் தொடர்புடைய இடங்களில் டெல்லியில் இருந்து வந்த வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தூர் நகரில் உள்ள காக்கர் இல்லம், போபால் நகரில் உள்ள அவரது இல்லம் மற்றும் அவர் தொடர்புடைய இதர இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. அவற்றை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

பிரவீன் காக்கர், முன்னாள் போலீஸ் அதிகாரி. கடந்த டிசம்பர் மாதம், கமல்நாத் முதலமைச்சர் ஆனவுடன், அவருடைய சிறப்பு அதிகாரியாக காக்கர் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, அவர் பதவி விலகினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தின்போது, மத்திய அமைச்சராக  இருந்த காந்திலால் பூரியாவிடமும் பிரவீன் காக்கர் சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார்.

அவரது குடும்பம், ஓட்டல் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதே போல் கொல்கத்தாவை சேர்ந்த தொழில் அதிபர் பரஸ் மால் லோதாவுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. அங்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனைகளில், கணக்கில் காட்டப்படாத ரூ.9 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இதையடுத்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக மத்தியபிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் ஊடகப்பிரிவு துணைத்தலைவர் பூபேந்திர குப்தா குற்றம் சாட்டினார்.

click me!