வாரணாசியில் மோடியை எதிர்க்கும் அய்யாக்கண்ணு... பாஜக தலைவர் அமித் ஷாவுடன் திடீர் சந்திப்பு...

By Asianet TamilFirst Published Apr 8, 2019, 6:55 AM IST
Highlights

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக தமிழக விவசாயி அய்யாக்கண்ணு அறிவித்திருந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

டெல்லியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக விதவிதமான போராட்டங்களை நடத்தினார்கள் தமிழக விவசாயிகள். பாரதிய கிஷான் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் காரணமாக அய்யாக்கண்ணுவை பாஜகவினர் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார்கள். குறிப்பாக ‘ஆடி கார் அய்யாக்கண்ணு’ என்று விளிப்பதையும் பாஜகவினர் ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

 
இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார். அவர் மட்டும் அல்லாமல், 111 விவசாயிகள் போட்டியிடுவார் என்றும் அறிவித்தார். அதேவேளையில் திமுக பிரசார மேடையில் அய்யாக்கண்ணு தோன்றியதை வைத்து அவரை தூண்டிவிடுவது  திமுகதான் காரணம் என்றும் பாஜகவினர் கூறிவருகிறார்கள். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை அய்யாக்கண்ணு டெல்லியில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.  
அமித்ஷா - அய்யாக்கண்ணு சந்திப்பின்போது தமிழக  தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் மற்றும் தமிழக அமைச்சர் தங்கமணி ஆகியோர் உடன் இருந்ததாகவும் தகவகள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புக்கு முன் இந்தத் தேர்தலில் விவசாயிகள் நலன் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் பாஜக அறிக்கையில் இடம்பெறுவதாக வாக்குறுதி அளித்தால், 111 விவசாயிகளும்  மோடியை எதிர்த்து போட்டியிடமாட்டார்கள் எனக் கூறியிருந்தார் அய்யாக்கண்ணு.

 
பிரதமர் மோடியை எதிர்த்து விவசாயிகள் களம் கண்டால், அது தேசிய அளவில் அரசுக்கு எதிரான ஒரு நிலையை உருவாக்கும் என்பதால், அவர்கள் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது.

click me!