
சத்தியமூர்த்தி பவனில் சண்டை! என்று செய்தி வந்தால், சரி! மாநிலத்தில் எல்லாம் இயல்பாக இயங்குகிறது என்று பொருள். அந்தளவுக்கு தினப்படி வழக்கமான விஷயம் அது. வேஷ்டி கிழிதழும், நாற்காலி பறத்தழும், கை கலப்பும் அங்கே டீ, காஃபி சாப்பிடுவது போல்.
ஆனால் கடந்த சில நாட்களாக சத்தியமூர்த்தி பவனுள் நடக்கும் மோதலானது மிக வித்தியாசமானது. திருநாவுக்கரசர் மற்றும் இளங்கோவனுக்கு இடையில் நடக்கும் கருத்துப் போர் உச்சம் பெற்று நிற்கிறது. இருவரும் இலை மறை காயாக ஒருவரை ஒருவர் கீறிக் கொண்டு கட்சியை காயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் இருக்கும் நிலையில், சமீபத்தில் ‘தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றப்படலாம்.’ என்று உசுப்பிவிட்டா மாஜி தலைவர் இளங்கோவன். இதற்கு இப்போது பதில் வாள் வீசியிருக்கும் திருநாவுக்கரசர்...
“கட்சி தலைவராக பொறுப்பேற்றதும் ராகுல் சில மாநிலத் தலைவர்களை மாற்றினார், ஆனால் என்னை மாற்றவில்லை. ராகுல் துணைத்தலைவராக இருந்த போது கூட மாநில தலைமைக்கு என்னைத்தான் பரிந்துரை செய்தார். இதுதான் இந்த பேரியக்கத்தில் எனக்கு இருக்கும் மரியாதை.
அதேவேளையில் தலைவர் பதவி என்பது நிரந்தரமல்ல என்பதையும் நான் நன்கு உணர்ந்து வைத்துள்ளேன்.இருக்கும் வரையில் சிறப்பாக பணியாற்றுதல் மட்டுமே என் லட்சியம்.”என்று சொல்லியிருப்பவர்,”உட்கட்சியில் சக தலைவர்களை அனுசரித்து செல்வதுதான் நல்ல நிர்வாகிக்கு அழகு. ‘மாற்றப்படுவார்’ என்று ஜோசியமெல்லாம் கூறுவது அவரவர் இயல்பை, குணத்தைப் பொறுத்தது. இப்படி பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ராஜிவ்காந்தியின் நண்பராகவே இருந்தவரும், கேபினெட் அமைச்சராக இருந்தவருமான மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரையே காங்கிரஸ் தலைமை நீக்கியது. அப்படியென்றால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார்கள். இதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இளங்கோவைனை நீக்க வேண்டுமென நான் கேட்டதில்லை. ” என்று தெறிக்கவிட்டிருக்கிறார் திருநாவுக்கரசர்.
அரசரின் இந்த வார்த்தைகளை ”மணிசங்கர் அய்யரையே தூக்கி எறிந்த கட்சி தலைமைக்கு இளங்கோவனெல்லாம் ஒரு விஷயமேயில்லை என்பதைத்தான், ‘இளங்கோவன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?’ எனும் கேள்விக்கு மறைத்துப் பேசி பதில் தந்திருக்கிறார் அரசர்.
இளங்கோவனை நீக்க நான் தலைமையிடம் கேட்டதில்லை! என்று சொல்லியிருப்பதன் மூலம் இளங்கோவன் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், அதனால் தனக்கு ஒன்றும் ஆவப்போவதில்லை, நான் அவரையெல்லாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை, அதனால்தான் அவரையெல்லாம் நீக்க சொல்லி கேட்கவில்லை! என்று அரசர் பேசியுள்ளார்.” என விளக்க உரை தருகின்றனர் சக காங்கிரஸ் நிர்வாகிகள்.
அரசர் - இளங்கோவன் இடையிலான இந்த ரத்தமில்லா யுத்த சப்தம் எப்படி முடிவுக்கு வருகிறதென பார்ப்போம்!