
மத்திய பட்ஜெட்டை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் கூட்டாக எதிர்த்துள்ளனர்.
மத்திய பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையிலான கவர்ச்சியான அறிவிப்புகள் இல்லை. ஆனால், விவசாயம், ஊரக வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும், விவசாய கடனாக 11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இலக்கு, ஆபரேஷன் கிரீனுக்காக 500 கோடி ஒதுக்கீடு என விவசாயத்திற்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், தேர்தலை மனதில் வைத்து அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் தான் இவை என்ற விமர்சனமும் உள்ளது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் சீமானும் சரத்குமாரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, விவசாயிகளுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் கடன் தருவதாக அறிவித்திருக்கிறார்கள். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், மக்களவைத் தேர்தலுக்குள் செயல்படுத்தப்படுமா? விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டவை விவசாயிகளை சென்றடையுமா? அடுத்த தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று மக்களிடம் கேட்கத்தான் இந்த கவர்ச்சியான அறிவிப்புகள்.
சாமானிய மக்களுக்கான பட்ஜெட் என கூறும் மத்திய அரசு, அறிவித்த அனைத்தையும் செயல்படுத்துமா? என்று பார்ப்போம் என்றனர்.
விவசாயிகள் அரசின் கண்ணுக்கு தெரியவில்லை. விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தற்போது 1.5 மடங்கு அதிக கொள்முதல் விலை என்கிறது அரசு. எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவானால், தங்க தட்டு இருக்கும். ஆனால் உண்ண உணவு இருக்காது. இதுவரை எந்த பட்ஜெட்டிலும் இல்லாமல், தேர்தலை மனதில் வைத்து விவசாயிகளை திருப்திப்படுத்த இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என சீமானும் சரத்குமாரும் குற்றம்சாட்டினர்.