
மக்களிடம் இருந்த பணத்தை வங்கிகளில் செலுத்த வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதை கொள்ளையடித்தார் நீரவ் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
வங்கியில் 11400 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு நீரவ் மோடி சுவிட்சர்லாந்து தப்பி சென்றுவிட்டார். தொழிலதிபர் விஜய் மல்லையாவை அடுத்து நீரவ் மோடியும் இந்திய வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பியுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த ஊழல் எப்படி நடைபெற்றது? ஏன் நடைபெற்றது? என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும். இந்த ஊழல் நடைபெற்றபோது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? என்பதையும் அவர் கூற வேண்டும்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பணத்தையும் வங்கிகளில் செலுத்த செய்தார் பிரதமர் மோடி. இப்போது அவரது நண்பர்களும் பெரு முதலாளிகளும் வங்கிகளில் இருந்து அந்த பணத்தை கொள்ளையடித்து விட்டனர். இவ்வளவு பெரிய முறைகேடானது அரசை நடத்துபவர்களுக்கு தெரியாமலோ அவர்களின் பாதுகாப்பு இல்லாமலோ நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.
மக்கள் பணத்தை வங்கிகளில் செலுத்த செய்தார் பிரதமர் மோடி. அதை கொள்ளையடித்துவிட்டார் நீரவ் மோடி. குழந்தைகள் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்று பேசுவதற்கு ஒன்றரை மணிநேரம் கிடைத்துள்ளது. ஆனால் இதற்குப் பதில் சொல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளித்தே தீர வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.