
நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) ஒரே சீராக இருக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கருத்து என்பது, மிகப்பெரிய முட்டாள்தனமான சிந்தனை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல்
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 4 , 9 ந் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜனதா கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும், கட்சியின் துணைத்தலைவர்ராகுல் காந்தியும் அனல்பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர்.
ராகுல் விமர்சனம்
சமீபத்தில் ஜி.எஸ்.டி. குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர்ராகுல் காந்தி, நாடுமுழுவதும் சீரான அளவில் ஜி.எஸ்.டி. வரி இருக்க வேண்டும் என்று பேசினார். அதுமட்டும் அல்லாமல், ஜி.எஸ்.டி. வரியை ‘கப்பார் சிங் டேக்ஸ்’ என்றும் கடுமையாக விமர்சித்தார்.
பதிலடி
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மார்பி நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக தாக்கி அவர் பேசியதாவது-
முட்டாள்தனம்
ஜி.எஸ்.டி. வரி நாடுமுழுவதும் சீராக 18 சதவீதம் இருக்க வேண்டும் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார். அவரின் கருத்து ‘மிகப்பெரிய முட்டாள்தனமான சிந்தனை’(gst-grand studpid thought).
அதுமட்டுமா, ஜி.எஸ்.டி. வரியை கொள்ளையடிக்கும் வரி என ‘கப்பார் சிங்டேக்ஸ்’ என்றும் ராகுல் காந்தி பேசினார். உண்மையில், நாட்டை கொள்ளையடித்தவர்களால் மட்டுமே இதுபோன்று வழிப்பறி சிந்தனை குறித்து பேச முடியும்.
குடிநீர் பிரச்சினை தீர்த்தோம்
நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, சவுராஷ்டிரா மண்டலத்தில் அமைந்திருக்கும்மார்பி நகரம், கட்ச் பகுதியில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கமுடியாமல் இருந்தது. தண்ணீர் பிரச்சினையால், இந்த பகுதி மக்கள் மிகுந்த ேவதனையில் இருந்தனர். ஆனால், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், நர்மதை அணையில் இருந்து தண்ணீர் எடுத்து இந்த பகுதி மக்களுக்கு கொடுத்தது.
ஆனால், காங்கிரஸ் கட்சியோ மக்களுக்கு ‘கை பம்பு’ அமைத்துக்கொடுத்தது. ஆனால், பா.ஜனதா அரசு மட்டுமே மக்களின் நலன் கருதி, நர்மதா குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி மிகப்பெரிய குழாய்கள் மூலம் மக்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து வருகிறோம்.
ஏன் தடை?
பிற்படுத்த சமூகத்தினரிடம் இருந்து வாக்குகளைக் கேட்கிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், இத்தனை ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து ஏன் அளிக்கவில்லை?. ஆனால், நாங்கள் இதை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி இருக்கிறோம், ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் அவையில் தேங்கிக்கிடக்கிறது. நாங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகமன நல்ல விஷயங்களை செய்ய விரும்புகிறோம்.
என்ன செய்தீர்கள்?
ராணுவத்தினர்களுக்காக காங்கிரஸ் அரசு என்ன செய்தது. ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை காங்கிரஸ் கட்சி 40 ஆண்டுகளாக செயல்படுத்தவே இல்லை. ஆனால், தேர்தல் வந்தவுடன் அந்த திட்டத்துக்கு ரூ.500 கோடி அறிவித்தது. உண்மையில் அந்த திட்டத்துக்கு இதைக் காட்டிலும் அதிகமான பணம் தேவை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.