
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, செய்தியாளர்களிடம் கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வைர விழாவாகவும் அறிவித்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரையும் அழைத்து மாபெரும் விழா நடத்தப்பட்டது.
இதல், இந்திய அளவில் உள்ள முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று, திமுக தலைவர் கருணாநிதிக்கு பின், மு.க.ஸ்டாலின் வழி நடத்த வேண்டும் என பேசினார்.
இதைதொடர்ந்து இன்று காலை ராகுல் காந்தி, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு சென்றார்.
ராகுல் காந்தியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். ராகுலுடன் திருநாவுக்கரசர், முகுல் வாஸ்னிக் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர்.
கருணாநிதியை சந்தித்தப்பின் ராகுல்காந்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் முன்னர் பார்த்ததைவிட அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது மகிழ்ச்சியை தருகிறது.
காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி தவறாக கையாள்கிறார். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. காஷ்மீர் இந்தியாவை பலப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன்னர் ராகுல்காந்தி சென்னைக்கு பலமுறை வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது, அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வந்தார்.
ஆனால், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவில்லை. இதனால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு, பல்வேறு பணிகள் காரணமாக சந்திக்க முடியாமல் ஆனது என அவர் கூறினார்.
இந்நிலையில் ராகுல்காந்தி, கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார். இது அவரை வீட்டுக்கு சென்று சந்தித்ததும், வீட்டுக்கே சென்றது முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.