16-ந் தேதி காங்கிரஸ் தலைவராக  ராகுல் காந்தி பதவி ஏற்பு......முறையான அறிவிப்பு இன்று வெளியாகிறது

First Published Dec 11, 2017, 6:29 AM IST
Highlights
rahul gandhi sworn as the resident of congress on 16th december


காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 16-ந்தேதி முறைப்படி பதவி ஏற்பார் என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோரிக்கை

கடந்த 1998ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். அவரின் வயது மூப்பு காரணமாக அடிக்கடி  உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தார்.

இதையடுத்து, கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என அந்த கட்சிக்குள் மூத்த தலைவர்கள் மட்டுமன்றி மாநிலங்களில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.

தலைவராக தீர்மானம்

இதையடுத்து, அனைத்து மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திலும் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன. கடந்த மாதம் கூடிய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

வேட்புமனு

இதையடுத்து, கடந்த 5 ந்தேதி வேட்புமனுத் தாக்கல் நடந்தது. இதில் ராகுல் காந்திக்கு எதிராக வேறு எவரும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படாத பட்சத்தில் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. 


89 பேர்
ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில்,  அவரின் பெயரால் 89 பேர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்களை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்து தாக்கல் செய்ப்பட்ட 89 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

கடைசி நாள்

இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெறக் இன்று கடைசி நாள் ஆகும். ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத காரணத்தால், இன்று மாலை தேர்தல் அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், உறுப்பினர்கள் மதுசூதன் மிஸ்திரி, புவனேஷ்வர் கலிடா ஆகியோர் முறைப்படி அறிவிப்பை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. 

16-ந்தேதி

அதன்பின், வரும் 16-ந்தேதி காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன் தேர்தல் அதிகாரி ஒப்படைப்பார் எனத் தெரிகிறது.

பதவி ஏற்பு

16-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியிடம் முறைப்படி தலைவர் பொறுப்பை சோனியா காந்தி ஒப்படைப்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்காக  நாடுமுழுவதிலும் இருந்து பல்வேறு மண்டலத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு 2 நாட்களுக்குமுன்பாக ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!