
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர், போதைப் பொருள் விற்பவர் என கர்நாடக மாநில பாஜக தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் மனுகுளி மற்றும் பாஜகவைச் சேர்ந்த உதசி ஆகிய எம்.எல்.ஏக்களின் மறைவு காரணமாக சிந்தகி மற்றும் ஹங்கல் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து வெளியான ட்வீட் ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இது காங்கிரஸ் - பாஜக இடையே மோதலை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கன்னட மொழியில் வெளியான அந்த ட்வீட்டில் பிரதமர் மோடி படிக்காதவர் என்று விமர்சிக்கப்பட்டு இருந்தது. அதில்,“காங்கிரஸ் கட்சி பள்ளிக்கூடங்களை கட்டியது. ஆனால் மோடி எப்போதும் படிக்க விரும்பவில்லை. மூத்தவர்கள் கல்வி கற்கவும் காங்கிரஸ் கட்சி திட்டங்கள் கொண்டு வந்தது. மோடி அங்கேயும் சென்று படிக்கவில்லை. பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதிலும், சோம்பேறிகள் நம் நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றிவிட்டனர். இந்த நாடு துன்பத்தில் இருக்கிறதென்றால் அது படிக்காத மோடியினால் தான்” என கூறப்பட்டிருந்தது.
இதற்கு பாஜக தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். பாஜக செய்தித்தொடர்பாளர் மாளவிகா அவினாஷ், காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இவ்வளவு கீழ்த்தனமாக நடந்துகொள்ள முடியும்’’ என்றார்.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் லாவன்யா பல்லல், இந்த ட்வீட்டின் சொல்லாடல் துரதிர்ஷ்டவசமானது. இது தொடர்பாக ட்வீட்டை வெளியிட்ட சம்பந்தப்பட்டவரிடம் விசாரிக்கப்படும். ஆனால் இதற்காக மன்னிப்பு கோர முடியாது’’ எனக்கூறினார்.