ராகுல் காந்தியிடம் கெஞ்சிய முதல்வர்கள்... கெஞ்ச கெஞ்ச விஞ்சும் காங்கிரஸ் நாட்டாமை!

By Asianet TamilFirst Published Jul 2, 2019, 9:34 AM IST
Highlights

ராகுலுடன் உடனான சந்திப்பு நல்ல முறையில் இருந்தது. காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை ராகுலிடம் எடுத்துக்கூறினோம்.  காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவருடைய தலைமையின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தோம். 

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை கைவிட காங்கிரஸ் முதல்வர்கள் ராகுல் காந்தியை வலியுறுத்திவிட்ட நிலையில், பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மொத்தமே 52 தொகுதிகளை மட்டுமே பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட அக்கட்சி பெறவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி அறிவித்தார். அவருடைய முடிவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் வலியுறுத்திவருகிறார்கள். ஆனால், ராகுல் காந்தி தனது முடிவிலிருந்து மாறவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர்களான அசோக் கெலாட் (ராஜஸ்தான்), கமல்நாத் (மத்திய பிரதேசம்), அமரிந்தர் சிங் (பஞ்சாப்), பூபேஷ் பாகல் (சட்டீஸ்கர்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினார்கள். அப்போது பதவி விலகும் முடிவை கைவிட்டு, தலைமை பொறுப்பில் தொடர வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தினார்கள். இச்சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராகுல் தனது முடிவை மாற்றிக்கொள்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.


 “ராகுலுடன் உடனான சந்திப்பு நல்ல முறையில் இருந்தது. காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை ராகுலிடம் எடுத்துக்கூறினோம்.  காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவருடைய தலைமையின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தோம். எங்களுடைய கோரிக்கையை ராகுல் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டார். எங்களுடைய கோரிக்கையை ஏற்று ராகுல் காங்கிரஸ் கட்சியை வழிநடத்திச் செல்வார் என்று நம்புகிறோம்.” என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.


காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் வலியுறுத்திவிட்டு சென்ற நிலையிலும், ராகுல் காந்தி தனது முடிவை திரும்ப பெறப்போவதில்லை என்ற முடிவில் ராகுல் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “நான் என்னுடைய முடிவை தெளிவாகத் தெரியப்படுத்தி உள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.

click me!