
அரசியல் லாபத்திற்காக பொய் கூறும் பாஜக, அரசியல் சாசனத்தின் மீதே தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, மதச்சார்பின்மைவாதிகள், முற்போக்காளர்கள் என கூறிக்கொள்பவர்கள், உண்மையில் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் ரத்தத்தின் அடையாளம் இல்லாதவர்கள். இதுபோன்ற அடையாளம் மூலம்தான் ஒருவர் சுயமரியாதையை பெற முடியும். அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை என்ற வாசகத்தை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சியில் பாஜக ஈடுபடும் என அவர் பேசியிருந்தார்.
பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன. நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பான எதிர்ப்பை தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மத்திய இணையமைச்சரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நிறுவன நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் பாஜகவால் தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது, அரசியல் சாசனத்தை பாதுகாப்பது காங்கிரஸின் கடமை. அரசியல் லாபத்திற்காக பாஜக பொய் கூறுகிறது. ஆனால் காங்கிரஸ் உண்மையின் பக்கம் உள்ளது. தேர்தல்களில் தோல்வியை தழுவினாலும் காங்கிரஸ் உண்மையின் பக்கமே உள்ளது. உண்மையை காங்கிரஸ் எப்போதும் கைவிடாது என ராகுல் பேசினார்.