
நீட் தேர்வால் மருத்துவர் கனவு தகர்ந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் சகோதரருக்கு அரசுப்பணி ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற கூலித்தொழிலாளியின் மகள் அனிதா. ஏழை குடும்பத்தில் பிறந்து சிறு வயது முதல் மருத்துவர் கனவை சுமந்து வந்த அனிதா, 12ம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவ படிப்பிற்கான கட் ஆஃப் மதிப்பெண் 196.7 ஆகும்.
மருத்துவ கவுன்சிலிங் மூலம் மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்பட்டிருந்தால், தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த அனிதாவிற்கு கண்டிப்பாக மருத்துவ இடம் கிடைத்திருக்கும். ஆனால், மருத்துவ படிப்பிற்கு நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால், அனிதாவால் மருத்துவம் படிக்க முடியவில்லை. இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அனிதா, கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
அனிதாவின் தற்கொலை நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலிக்க செய்தது. எனினும் நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறமுடியவில்லை.
இதையடுத்து அனிதாவின் சகோதரருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், அனிதாவின் அண்ணன் சதீஷ்குமாருக்கு சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
7 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதல்வர் பழனிசாமி அனிதாவின் தந்தையிடம் வழங்கினார்.