
குஜராத் மாநில சட்ட சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, கடுமையாகப் பாடு பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது குடும்பச் சொத்து போல் கருதி வரும், சொந்த தொகுதியான அமேதியை கோட்டைவிட்டுவிட்டார்.
அண்மையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. அதில் சோனியா, ராகுலின் குடும்பத் தொகுதிகள் போல் கருதப் படும் ரே பரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் பாஜக., வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்போதே, ராகுலின் பிடி தொகுதியில் தளர்ந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், குஜராத் தேர்தல் வேறு களை கட்டியதால், குஜராத்தில் வென்றே தீரும் முனைப்புடன் கோயில் கோயிலாகச் சென்று, தாமும் இந்து மதத்தின் வித்தாகக் காட்டிக் கொள்ள கடுமையாக பிரசாரம் எல்லாம் செய்தார் ராகுல்.
ஆனால், ராகுல் நின்று எம்.பி. ஆனதோ, உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி. காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல், இரு தினங்களுக்கு முன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகாரபூர்வ தலைவராகிவிட்ட ராகுல், வரும் 16ஆம் தேதி தலைவர் பதவியை ஏற்கிறார். இவர் தலைவர் ஆனதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். பிரதமர் மோடி கூட, வழக்கம் போல் டிவிட்டரில் வாழ்த்தை தெரிவித்துவிட்டார். ஆனால், ராகுலை வாழ்த்த வேண்டிய அமேதி தொகுதி மக்களோ அவருக்கு எதிராகக் கொடிபிடித்துள்ளனர்.
காங்கிரஸின் புதிய தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமேதியில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். ராகுலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், ராஜீவ் காந்தி நினைவிடம் அமைப்பதற்காக தாங்கள் கொடுத்த நிலத்தை தங்களுக்கே திருப்பித் தர வேண்டும். அல்லது தங்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழி செய்ய வேண்டும், வேலை வழங்க வேண்டும், இல்லை என்றால் தங்கள் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை இடித்துத் தள்ளிவிட்டு போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது அமேதி தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் தேர்தல் முடிவுகள் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், தலைவராகப் பொறுப்பேற்கும் ராகுலுக்கு குஜராத் இனிப்பான செய்தியைத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.