
ஓகி புயலால் உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்திற்கான நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவித்த ரூ.4 லட்சம் நிவாரண நிதியுடன் கூடுதலாக ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டமே தண்ணீரில் தத்தளித்தது. மேலும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் மாயமாயினர்.
புயலால் பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்களும் வெளியாகியது. இதனால் அவரகளை மீட்க தமிழக அரசு கப்பல் படையையும் கடலோர காவல் படையையும் களமிறக்கியுள்ளது.
ஆனால் ஆழ்கடல் பகுதியில் காணாமல் போன மீனவர்களை கரை பகுதியிலேயே தேடுகின்றனர் என கூறி மீனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் அல்லாத குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சமும் மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் மீன்வர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சம் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், தற்போது ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் அல்லாத குடும்பத்திற்கு ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். நிவாரண நிதியுடன் கூடுதலாக ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.