
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12–ந்தேதி நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ், பாரதீய ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கோலா–குமட்டா–பட்கல் ஆகிய பகுதிகளில் சாலை மார்க்கமாக பிரசார வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பிரசார வாகனத்தில் இருந்தபடி ராகுல்காந்தி பேசுகையில் பிரதமர் மோடி, பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சி ஏழை–எளிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்று பாடுபட்டு வருகிறது. ஆனால் பா.ஜனதா கட்சி, 10 கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறது என்றார்.
மத்திய அரசுக்கு பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. இப்படி ஒரு ஆட்சி நமக்கு தேவையா?. கர்நாடகத்தில் பா.ஜனதாவை தேர்ந்தெடுத்தால், என்ன நிலை ஏற்படும் என்பதை கடந்த 2008–ம் ஆண்டு நடந்த தேர்தலிலேயே மக்கள் உணர்ந்திருப்பார்கள். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளில், ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த அனைத்தையும் காங்கிரஸ் அரசு நிறைவேற்றி உள்ளது. இதனால் மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். கர்நாடகத்தில் நடக்கும் இந்த தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்..
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மக்களின் பணத்தை, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தான் பயன்படுத்தும். இது தான் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே உள்ள வித்தியாசம். கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது எடியூரப்பா மற்றும் 4–5 மந்திரிகள் ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றனர். ஆனால், தற்போது அவர்கள் ஊழலை ஒழிப்பதாக பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஊழல்வாதிகளை அருகே வைத்துக்கொண்டு, ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் என்று தெரிவவித்தார்.