
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையின்போது, மக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதற்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் காவிரியை பாதுகாப்பதைவிட மெரினா கடற்கரை முக்கியமா என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் போராட்டம் நடத்தும் இடங்கள் குறித்த பட்டியலை காவல் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை புறநகர் பகுதிகளில் 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்த பட்டியலில் சென்னை மெரினா கடற்கரை குறிப்பிடப்படவில்லை. அதேபோல சென்னை பனகல் மாளிகை எதிரேயும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அய்யாகண்ணு, மெரினாவில் போராட்டம் நடத்த வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. வரும் 29 ஆம் தேதி அன்று மெரினாவில் போராட்டம் நடத்தவதாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார். ஆனால், போலீசார் அனுமதி அளித்துள்ள பட்டியலில் மெரினா இடம் பெறாததை அடுத்து, போராட்டம் மெரினாவில் நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.