ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை... தபால் ஓட்டுகள் கைகொடுக்கும் நம்பிக்கையில் திமுக... பதற்றத்தில் அதிமுக!

By Asianet TamilFirst Published Oct 4, 2019, 8:20 AM IST
Highlights

தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட்டிருப்பதால், அதில் வெற்றி கிடைக்கும் என்று திமுக தெம்பாக நம்புகிறது. வழக்கமாக அரசு ஊழியர்கள் திமுகவுக்கு அதிகளவில் வாக்களிப்பார்கள் என்பதால் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை திமுக தெம்பாகவும், அதிமுக பதற்றத்தோடும் எதிர்பார்க்கின்றன.   
 

ராதாபுரம் தொகுதியில் பதிவான 3 சுற்றுகள் வாக்குகள் மற்றும் 203 தபால் வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ள நிலையில் திமுக, அதிமுக முகாமில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. 
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரைக்கும் திமுக வேட்பாளர் அப்பாவுக்கும் இழுபறி ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில் இன்பத்துரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்பத்துரை 69, 590‌ வாக்குகளும், திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.


இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அதில் 19, 20, 21 ஆகிய கடைசி 3 சுற்றுகளில் பதிவான வாக்குகளை முறையாக எண்ணவில்லை என்றும் 203 தபால் வாக்குகளை செல்லாத வாக்குகளாக கூறியத் செல்லாது என்று அறிவிக்கக்கோரியும் அப்பாவு கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம் செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும் 3 சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுவாக தாக்கல் செய்த இன்பதுரையின் மனுவை நீதிமன்றம் உடனடியாக ஏற்கவில்லை. உத்தரவுக்கு எதிராக இன்பதுரை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோதும், அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் 203 தபால் வாக்குகளும் 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்கு இயந்திரங்களும் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை 11.30 மணிக்கு தலைமை பதிவாளர் முன்னிலையில் வாக்கு எண்ணிகை நடைபெற உள்ளது. 
இந்த எண்ணிக்கையில் கிடைக்கும் முடிவுகளை பதிவாளர் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார். இன்று மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ தரப்பு பதற்றத்தில் இருப்பதாக அக்கட்சி அதேவேளையில்  தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட்டிருப்பதால், அதில் வெற்றி கிடைக்கும் என்று திமுக தெம்பாக நம்புகிறது.
வழக்கமாக அரசு ஊழியர்கள் திமுகவுக்கு அதிகளவில் வாக்களிப்பார்கள் என்பதால் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை திமுக தெம்பாகவும், அதிமுக பதற்றத்தோடும் எதிர்பார்க்கின்றன.   

click me!