அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரைக்கு சவால் விட்ட அப்பாவு..!

By vinoth kumarFirst Published Oct 7, 2019, 4:57 PM IST
Highlights

ராதாபுரம் தொகுதி விவகாரத்தில் பெரும்பான்மை தபால் வாக்குகளுக்கு ஒரே நபர் சான்று அளித்தார் என்பதை நிரூபிக்க அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை தயாரா என திமுக வேட்பாளர் அப்பாவு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

ராதாபுரம் தொகுதி விவகாரத்தில் பெரும்பான்மை தபால் வாக்குகளுக்கு ஒரே நபர் சான்று அளித்தார் என்பதை நிரூபிக்க அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை தயாரா என திமுக வேட்பாளர் அப்பாவு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, 203 தபால் ஓட்டுகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் ஒரு அறையில் அக்டோபர் 4-ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடைக்கோரி எம்.எல்.ஏ. இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அமித் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அக்டோபர் 23-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை கூறுகையில், தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் எழுந்துள்ள சட்ட வினாவிற்கு தீர்வு காண்பதற்காகவே உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக கூறினார். ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு பற்றி ஸ்டாலின் பேசி வருவது குறித்தும், உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக எம்.எல்.ஏ. இன்பதுரை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கவே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், அது பற்றி பேச தங்களுக்கு வாய்ப்பூட்டு போடவில்லை எனவும் திமுக வேட்பாளர் அப்பாவு தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான தபால் வாக்குகளுக்கு ஒரே நபர் சான்று அளித்ததை இன்பதுரை நிரூபிக்கத் தயாரா எனவும் அப்பாவு சவால் விடுத்துள்ளார்.

click me!