
ஐஸ்வர்யா - தனுஷ் திருமண வாழ்க்கை குறித்து கவலைகளுக்கு மத்தியில் ரஜினியின் புதிய பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஒரு மாநிலத்தின் தலைநகரில் அரசு வேலையில் இருந்த இளைஞர், அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, மொழி தெரியாத இன்னொரு மாநிலத் தலைநகரில், சினிமாவில் களமிறங்கி சாதிக்க முடியும் என்றால் நம்ப முடியுமா? அந்த இளைஞர் நம்பினார். நம்பியது மட்டுமல்ல, சாதித்தும் காட்டினார். அவர்தான், ரஜினி. ‘பாட்ஷா’ படத்தில் வரும் டயலாக்கைப் போல அவருடைய நாடி, நரம்பு, சதை, ரத்தம், புத்தி எல்லாமே சினிமாதான். அதனால்தான், 71 வயதிலும் தன்னுடைய படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்டு, தமிழ்த் திரையுலகை திரும்பி பார்க்க வைக்க முடிகிறது. ரஜினிக்கு சறுக்கல், சிக்கல் என வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி எப்போது ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு(ம்) சினிமா என்ற கனவுக் கோட்டைக்குள் திரும்பியிருக்கிறார்.
ரஜினிக்கு முதன் முறையாக 2011-இல் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, சிங்கப்பூர் என்ற சிகிச்சைக்கு சென்ற காலத்தில், மீண்டும் ரஜினி சினிமாவுக்குள் வருவாரா என்ற கேள்வி அழுத்தமாக எழுந்தது. ஆனால், அதிலிருந்து மீண்டு ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ என அடுத்தடுத்து களமிறங்கினார் ரஜினி. அவரை மீண்டும் சினிமாவுக்குள் இழுத்து வந்தது, சினிமா மீது அவர் வைத்திருந்த காதல்தான். 1996-ஆம் ஆண்டிலிருந்தே ரஜினி அரசியலுக்கு இப்போ வருவார் அப்போ வருவார் என்று கூறப்பட்டாலும், அரசியல் பேச்சு வேகமெடுத்தது 2017-க்குப் பிறகான காலத்தில்தான். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி களமிறங்குவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கொரோனாவைக் காரணம் காட்டி அரசியலை தவிர்த்தார். தன்னுடைய உடல்நிலை பிரச்சினையைக் காரணம் கட்சி தொடங்குவதிலிருந்து ஒதுங்கினார்.
ஆனால், சினிமாவிலிருந்து ரஜினி ஒதுங்கவில்லை. ஏனெனில், அரசியல் அவருக்கு தெரியாத வேலை. சினிமா என்பது ரஜினி அறிந்த வேலை மட்டுமல்ல, அவர் ஆத்மார்த்தமாக நேசிக்கும் வேலை. அதனால்தான் சினிமாவிலிருந்து அவரால் ஒதுங்க முடியவில்லை. இப்போதும் உடல்நிலைப் பிரச்சினை இருக்கிறது. அதைவிட அவருடைய மகள் ஐஸ்வர்யா - தனுஷ் வாழ்க்கை முறிவு ஏற்பட்டிருக்கும் நேரம். ஐஸ்வர்யா திருமண வாழ்க்கையால் ரஜினி மனம் நொந்துபோயிருக்கிறார். ஒரு பெண்ணின் வாழ்க்கையை எண்ணி பெருமையடையும் முதிய வயதில், பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறியாவதை எந்தத் தகப்பனாலும் தாங்க முடியாது. அதனால்தான் தன்னுடைய உடல்நிலையைவிட ஐஸ்வர்யாவின் வாழ்க்கையும், பேரன்களின் எதிர்காலம் பற்றியும் ரஜினி கவலையில் ஆழ்ந்திருக்கிறார் என்றும் தகவல்கள் வருகின்றன.
இப்படி ஒரு சூழலில் ஒருவரால் தன்னுடைய தொழிலில் முழுமையாக கவனத்தைச் செலுத்த முடியுமா? ஆனால், ரஜினியால் அதைச் செய்ய முடிந்திருக்கிறது. ஏனெனில், சினிமாதான் ரஜினிக்கு மருந்து. அவரை கவலையிலிருந்து விடுவிக்கும் மாமருந்தும் சினிமாதான். மகள் வாழ்க்கை, உடல்நலம் போன்ற பிரச்சினைகள் இருந்தபோதிலும், அந்த மருந்துதான் அவரை மீண்டும் ‘ரஜினி 169’ பட அறிவிப்பை வெளியிட வைத்திருக்கிறது. ‘தலைவர் 169’ போஸ்டரில் சிரிக்கும் ரஜினியின் போஸ்டர் அதைத்தான் உணர்த்துகிறது என்றும் சொல்லலாம்!