
தமிழகத்துக்கு முதல்வர் வேண்டும் வேண்டாம் என்ற விஷயத்தில் திமுக காங்கிரஸ் இடையே முட்டல் மோதல் ஆரம்பமாகியுள்ளது. புதிய முதல்வர் வேண்டும் என ஸ்டாலின் சொல்ல தேவை இல்லை என கூட்டணி காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.
தஞ்சாவூரில் மாற்றுக்கட்சியிலிருந்து 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழாவுக்காக செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்கப்பட்ட வேண்டும் என்று பேட்டி அளித்தார்.
அதற்கு மறுநாளே பதிலளித்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தமிழகத்துக்கு புதிய முதல்வர் தேவை இல்லை. அப்படி ஒரு அவசியமும் எழவில்லை என்று பேட்டி அளித்தார்.
அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் தான் போகும் இடமெல்லாம் தமிழகத்திற்கு புதிய முதல்வர் வேண்டும் என்று பேட்டி அளித்து வருகிறார். அதே நேரம் திருநாவுக்கரசரும் தொடர்ச்சியாக இதை மறுத்து வருகிறார். இந்நிலையில் இது பற்றி செய்தியாளர்கள் நேற்று திருநாவுக்கரசரிடம் கேள்வி எழுப்பினர்.
கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி முரண்பட்ட கருத்துக்களை கூறலாமா? இது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தாதா என கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர் அவர் ஒரு கட்சியின் தலைவர் , நான் ஒரு கட்சியின் தலைவர் அவர் அந்த கட்சியின் தலைவர் என்ற முறையில் அவர் கருத்தை அவர் கூறுகிறார் , காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் என் கருத்தை நான் கூறுகிறேன் இதில் எங்கே முரண்பாடு என்று கேட்டார்.
மேலும் திமுகவுடன் கூட்டு என்பது தேர்தல் நேரத்தில் இடப்பங்கீடு மட்டுமே அதற்காக அவர்களுக்கு முரணான கருத்துக்களை கூறுவதால் கூட்டணி பாதிக்கும் எனபது அர்த்தமல்ல என்று தெரிவித்திருந்தார்.
திருநாவுக்கரசரின் ஆணித்தரமான இந்த கருத்தை திமுக தலைமை ரசிக்கவில்லையாம். பொதுவாக திமுகவுடன் கூட்டணி என்றால் அவர்களின் குரலாக ஒலிப்பது தான் வழக்கம் . இதுவரை ஈவிகேஎஸ் இளங்கோவனும் அதைத்தான் செய்து வந்துள்ளார்.
ஆனால் தற்போது திருநாவுக்கரசர் பல விஷயங்களில் தனது ஆணித்தரமான கருத்துக்களை தைரியமாக தெரிவித்து வருவது திமுக தலைமைக்கு , முக்கியமாக மு.க.ஸ்டாலினுக்கு அறவே பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முதல்வர் படத்தை வெளியிட வேண்டும், புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் எனபது திமுக தலைவரின் நிலை பாடு, தமிழக அரசு செயல்படாமல் இருக்கிறது ஆகையால் கவர்னர் பிரச்சனையை கையிலெடுக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் நிலைபாடு, நேற்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையில் தமிழக அரசின் நிர்வாகம் சீரழிந்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று பேட்டி அளித்த திருநாவுக்கரசர் முதலமைச்சர் நலமடைந்து வருவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
திமுகவுடன் கூட்டணி என்பது தொகுதி பங்கீடு எனபது இடதுசாரிகள் முன்பு சொல்லும் காரணம் போல் உள்ளதாக திமுக கருதுகிறது.
இது போன்ற பனிப்போரால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட துவங்கி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.