முடிந்தது அதிமுக – பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை !! பியூஸ் கோயல் – தங்கமணி, வேலுமணி நள்ளிரவைத் தாண்டி ஆலோசனை !!

By Selvanayagam PFirst Published Feb 15, 2019, 6:59 AM IST
Highlights

அ.தி.மு.க., - பாஜக இடையே நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய கூட்டணி பேச்சுவார்தை அதிகாலை மூன்று வரை நீடித்தது. சென்னை வந்திருந்த மத்திய அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பளருமான பியூஸ் கோயலுடன் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். 
 

தமிழகத்தில், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக மற்றும் புதிய தமிழகம் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஏற்கனவே திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக  பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, மத்திய அமைச்சர், பியூஷ் கோயல், நேற்று இரவு, 8:00 மணிக்கு, தனி விமானத்தில், சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல் , தமிழக மக்கள் மீது, பிரதமர் அக்கறை கொண்டுள்ளார். தமிழக மக்களும், பிரதமர் மீது, அக்கறை கொள்வர். தமிழக மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, வலுவான கூட்டணி அமைப்போம். கூட்டணி முன்னேற்றம் குறித்து பேசவே, தமிழகம் வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை  ஆழ்வார்பேட்டையில் உள்ள, தொழில் அதிபர், பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டிற்கு, பியூஷ் கோயல் சென்றார். அங்கு, அ.தி.மு.க., தேர்தல் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ள, மின் துறை அமைச்சர், தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் வந்தனர். 

அவர்களுடன், கூட்டணி குறித்து, பியூஷ் கோயல், பேச்சு வார்த்தை நடத்தினார். ஏற்கனவே பாமக, தேமுதிகவுடன் அதிமுக சார்பில் பேச்சு வார்த்தை நடைபெற்று முடிந்துள்ள நிலையில்  தொகுதி பங்கீடு குறித்து மட்டும் நேற்று பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இக் கூட்டணியில் 8 சீட்டுகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் எனவும் ஏறக்குறைய முடிவாகி உள்ளதாம். அதேபோல தேமுதிக, பாமகவுக்கு தலா 4 சீட் என்றும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் முழுமையாக பேசி முடித்த பிறகு தொகுதிப் பங்கீடு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலை மூன்று மணி வரை பேச்சு வார்த்தை நடந்து முடிந்தபின் அப்போதே பியூஸ் கோயல் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

click me!