Punjab poll : பஞ்சாப்பில் அடுத்து யார் ஆட்சி.? முட்டிமோதும் கை.. பதறும் தாமரை.. துடைத்தெறியும் துடைப்பம்!

By Asianet TamilFirst Published Dec 22, 2021, 9:35 PM IST
Highlights

காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு அதிர்ச்சித் தரும் வகையில், ஆம் ஆத்மி கட்சி 38.83 சதவீத வாக்குகளுடன் 47 - 52 இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. 

அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பஞ்சாப்பில் காங்கிரஸ், அகாலிதளம், பாஜக - அம்ரீந்தர் சிங் கூட்டணி, ஆம் ஆத்மி என 4 முனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் பாஜக தலைமை ஆர்வம் காட்டி வருகிறது. இதேபோல ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அகாலிதளமும் தீயாய் உழைத்து வருகின்றன. இடையில் ஆம் ஆத்மியும் பஞ்சாப்பில் பலம் காட்டி வருகிறது. 

தேர்தலையொட்டி பஞ்சாப்பில் தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நியூஸ் எக்ஸ் - போல்ஸ்டார் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில், பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 117 இடங்களில் ஆளுங்கட்சியான காங்கிரஸ், 35.20 சதவீத வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி 40 - 45 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு அதிர்ச்சித் தரும் வகையில், ஆம் ஆத்மி கட்சி 38.83 சதவீத வாக்குகளுடன் 47 - 52 இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெஜாரிடிக்கு நெருக்கமாக ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. 

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக 2.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 1 - 2 தொகுதிகளில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆளுங்கட்சியான அகாலிதளம் 21.01 சதவீத வாக்குகளுடன் 22-26 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு சுமார் 33 சதவீதம் பேர் பஞ்சாப்புக்கு புதிய முதல்வர் தேவை எனக் கருத்து தெரிவித்துள்ளனர். முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு ஆதரவாக 22 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். கேப்டன் அமரீந்தர் சிங்க்கு ஆதரவாக 16 சதவீதம் பேரும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 9.80 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அகாலி தளம் கட்சியின் சுக்பீர் சிங் பாதலுக்கு 17.70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

click me!