
குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குற்றவழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு தற்போது அமலில் உள்ளது.
பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்பவர பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிக்கக்கூடாது. வாழ்நாள் முழுவதும் போடடியிட தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இதேபோல், மக்கள் நல அறக்கட்டை சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கு விசாரணையில், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி. எம்.எல்.ஏ, உள்ளிட்ட மக்கள் பிரதிநதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்களும் நீதிமன்றம் பிறப்பித்த தடைக்காலம் முடிந்த பின்னர் தேர்தலில் போட்டியிடலாம் என தெரிகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையம் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியான பிறகே இது குறித்து உறுதியாக கூற முடியும்.