ஜெகன்மோகன் அறிவிப்பு.. அன்று ஜெயலலிதா செய்ததை முதல்வர் ஸ்டாலின் செய்ய வேண்டும்.. ஐடியா கொடுக்கும் தினகரன்.!

By vinoth kumarFirst Published Sep 26, 2022, 6:46 AM IST
Highlights

124 ஆண்டுகளாக தமிழகத்திடமிருந்த முல்லைப் பெரியாறில் தண்ணீர் திறந்துவிடும் உரிமையைக் கேரளாவிடம் பறிகொடுத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது ஸ்டாலின் அரசு.

நதி நீர் பிரச்னைகளில் நமக்குரிய உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் அதனைப் பறிகொடுப்பதே திமுக ஆட்சி காலங்களின் வரலாறு என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக - ஆந்திர எல்லையிலுள்ள புல்லூரில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் கூடுதலாக 2 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கப் போவதாக ஆந்திர அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கப் போவதாக அம்மாநில முதல்வர் அறிவித்திருப்பது பெரும் கவலையளிக்கிறது. பல மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதியில் ஒரு மாநில அரசு தன்னிச்சையாக புதிய அணையைக் கட்டுவதும், ஏற்கெனவே உள்ள அணையின் கொள்ளளவை அதிகரிப்பதும் சட்டப்படி தவறானதாகும்.

2016-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதும் இத்தகைய முயற்சியை ஆந்திர அரசு மேற்கொண்டது. அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆந்திர அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். அதே திட்டத்தைதான் தற்போது ஆந்திரா மீண்டும் கையில் எடுத்துள்ளது. ஏனெனில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் அண்டை மாநிலங்களுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது. நதி நீர் பிரச்னைகளில் நமக்குரிய உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் அதனைப் பறிகொடுப்பதே திமுக ஆட்சி காலங்களின் வரலாறு.

கருணாநிதி ஆட்சியைப் பின்பற்றி ஸ்டாலின் ஆட்சியிலும் அதுதான் நடக்கிறது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட ரூ.1000 கோடியை ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளைத் தொடங்கிவிட்டது. 124 ஆண்டுகளாக தமிழகத்திடமிருந்த முல்லைப் பெரியாறில் தண்ணீர் திறந்துவிடும் உரிமையைக் கேரளாவிடம் பறிகொடுத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது ஸ்டாலின் அரசு.

இப்போது புல்லூர் அணைக்கட்டின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டால் மழை, வெள்ள காலங்களில் பாலாற்றில் வரும் தண்ணீரின் அளவும் குறைந்து போய்விடும். பாலாற்றுப் படுகை விவசாயம் மட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதி மக்கள் குடிநீருக்காகவும் பாலாற்றைதான் நம்பியிருக்கின்றனர். எனவே, உடனடியாக ஆந்திர அரசின் இம்முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அரசியல் ரீதியான அழுத்தங்கள் மட்டுமின்றி 2016-ல் அதிமுக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் திமுக அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

click me!