
ஓ.பி.எஸ்.,-இ.பி.எஸ்., அணியினர் அதிமுக என்ற பெயரை பயன்படுத்துவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளர்.
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக இன்று காலை தலைமை தேர்தல் ஆணையத்தில், எடப்பாடி தரப்பினர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில், தற்போது டிடிவி அணியும் தாக்கல் செய்துள்ளது.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து, ஆர்.கே. நகர் தேர்தலின்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியும், சசிகலா அணியும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.
இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.
இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்ததை அடுத்து, டிடிவி தினகரன் தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரத்தை இன்று காலை தாக்கல் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து டிடிவி தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்தது.
இரட்டை இலை சின்னமும், கட்சியும் சட்டப்படி எங்களுக்கே கிடைக்கு என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி, தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிமுக என்ற பெயரை பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.