
’பச்சோந்தி’ எனும் வார்த்தை பிரயோகம் செங்கோட்டையன் மற்றும் தினகரன் அணிக்கு இடையில் ஒரு புயலை கிளப்பியிருக்கும் நிலையில் தினகரனின் வலது கையான பெங்களூரு புகழேந்தி இந்த விவகாரம் குறித்து திருவாய் மலர்ந்திருக்கிறார்.
அவர் “சகோதரர் செங்கோட்டையன் மேல் எங்களுக்கு மரியாதையுண்டு. அவரை நாங்கள் தவறாக பேசியதில்லை, அது போல் அவரும் தினகரனையோ அல்லது சின்னம்மாவையோ தவறாக பேசியதில்லை. ‘நான் பச்சோந்தி போல் மாறுபவன் அல்ல’ என்று அவர் சொல்லியிருக்கும் நிலையில், யாரை அவர் பச்சோந்தி என்று குறிப்பிடுகிறார் என்று புரியவில்லை. அவரை எனக்கு நன்றாக தெரியும். பச்சோந்தி யார் என்பது அவருக்கும் புரியும்.
கட்சி அலுவலகத்துக்கு நாங்கள் போகாததும், பொதுக்குழுவை கூட்டாததும் ஒண்ணும் எங்களுக்கு பின்னடைவில்லை. எங்களால் கட்சி அலுவல்கத்துக்கு போக முடியும். ஆனால் நாங்கள் வன்முறையை விரும்பவில்லை. வன்முறை வேண்டாமென்று நினைக்கிறோம். கோர்ட்டோ அல்லது கவர்னரோ சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க சொன்னால் அன்றுதான் இந்த ஆட்சியின் கடைசி நாள்.
இந்த ஆட்சி மீது மக்கள் மட்டுமல்ல அ.தி.மு.க. தொண்டர்களும் வெறுப்பில் இருக்கிறார்கள். தங்களை இயக்கும் மோடியிடம் இரட்டை இலை சின்னத்தை விற்றுவிட்டார்கள் பன்னீர் அணியினரும், எடப்பாடி அணியினரும்.” என்று போட்டுத் தள்ளியிருப்பதோடு, தாங்கள் அஹிம்சாவாதி என்று சொல்லி ஃபுல்லாக புல்லரிக்க வைத்திருக்கிறார் புகழ்.