
ஒரு மந்திரி பதவிக்கான மாண்பினை மறந்து தத்துப்பித்தென பேசும் தமிழக மந்திரிகளில் முதன்மையாக நிற்கிறாராம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பொது மேடைகளில் இவரது காமெடி பேச்சுக்களை மேற்கோள்காட்டி எவ்வளவுதான் கழுவிக்கழுவி ஊத்தினாலும் எதையும் கண்டு கொள்ளாமல் ‘ஆபரேஷன் அ.தி.மு.க. அழிப்பு’ எனும் டார்கெட்டுடன் செயல்பட்டு கட்சியின் மரியாதையை குழைப்பதிலேயே குறியாக இருக்கிறார் என்று அக்கட்சியினரே குமுறுகின்றனர்.
சென்னையில் ஈஷா அமைப்பு சார்பில் நடந்த ‘நதிகளை மீட்போம்’ நிகழ்வில் கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் சுதா ரகுநாதனின் பெயரை இவர் குதறி எடுத்ததும், நடிகை சுஹாசினியின் பெயரை இவர் உளறிக் கொட்டியதும், சுதா ரகுநாதனை ‘கதகளி’ கலைஞர் என்று இவர் மாற்றி சொல்லியதும் நிகழ்ச்சியின் பக்குவத்தை பக்கோடாவாக்கியது. இந்த கெக்கேபிக்கேத்தனங்களுக்கு மிகக்கடுமையான விமர்சனங்களை வாங்கிக் கட்டியும் திண்டுக்கல்லார் திருத்திக் கொள்ளவில்லை என்கின்றனர் அ.தி.மு.கழக நிர்வாகிகள்.
அதேபோல் ’அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த அம்மாவை யாருமே பார்க்கலை. எல்லாரும் உங்க கிட்ட பொய் சொன்னோம்!’ என்று பொது மேடையில் தொண்டர்கள் மற்றும் மக்களிடம் இவர் கொளுத்திப்போட்ட பட்டாசு அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள் மீதான நம்பகத்தன்மையை பொதுவெளியில் கேள்விக்குறியாக மட்டுமல்ல கேலிக்குறியாகவும் மாற்றியது.
இந்த சூழலில் சமீபத்தில் திண்டுக்கல்லில் ஒரு கூட்டத்தில் பேசிய சீனிவாசன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை டெல்லிக்கு அனுப்பி மாண்புமிகு திரு. மன்மோகன் சிங் அவர்களை சந்திக்க வைத்து, தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்பிற்கு நடவடிக்கை எடுத்தார் என்று பேசினார். இந்திய பிரதமரின் பெயரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றிப் பேசிய விவகாரம் பா.ஜ.க.வினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு எதிர்கட்சிக்களை விலா நோக சிரிக்க வைத்திருக்கிறது.
சீனியின் இந்த பேச்சுக்கு இணைய வெளியில் வழக்கம்போல் மீம்ஸ்களும், நக்கல் விமர்சனங்களும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் “இந்த நாட்டை ஆளும் பிரதமர் யார் என்பதை கூட தெரியாத நிலையில் தமிழக அமைச்சர்கள் உள்ளது வெட்கக்கேடு. எந்த கட்சியின் காலில் அ.தி.மு.க. விழுந்து கிடக்கிறதோ அந்த கட்சியின் முக்கிய புள்ளிதான் பிரதமர் என்பதை மறந்து கிடக்கிறார்கள்.
ஆனால் மன்மோகன் சிங்கை பிரதமர் என்று திண்டுக்கல் சீனிவாசன் சொல்லியுள்ளதன் மூலம் கூடிய விரைவில் மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வரப்போகிறது என்கிற உண்மையை பேசியிருக்கிறார். அந்த வகையில் சந்தோஷமே!” என்று வழக்கமான தனது ஹாஸ்ய பாணியில் இடித்து தள்ளியிருக்கிறார்.