
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வந்ததும் ஆட்சி மாற்றம் ஏற்படும். தினகரன் முதல்வர் ஆவார் என அவரது ஆதரவாளர் புகழேந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகுதிநீக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. எனவே தீர்ப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லாது என்று தங்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும் தினகரன் ஆதரவாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தினகரன் அணி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய தினகரன் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்புவரும்.
அந்த 18 எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்துக்கு செல்லும் நாளுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு வந்ததும் பழனிசாமி ஆட்சி கலைக்கப்படும். தினகரன் முதல்வர் ஆவார். அதன்பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என புகழேந்தி பேசியுள்ளார்.