ADMK: அன்வர் ராஜா விவகாரம்… அழிய போகிறது அதிமுக… பொட்டில் அடித்த புகழேந்தி

By manimegalai aFirst Published Dec 1, 2021, 8:19 AM IST
Highlights

அதிமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அன்வர் ராஜா நீக்கம் பற்றி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: அதிமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அன்வர் ராஜா நீக்கம் பற்றி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 3 நாட்களாக பெரும் பரபரப்பான சூழலில் தான் அதிமுக நேற்றிரவு 10.45 மணி அளவில் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறது. அக்கட்சியின் சிறுபான்மையினர் நல பிரிவின் செயலாளர் பதவியில் இருந்தும், அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டு உள்ளார் என்ற அறிவிப்பு ரத்தத்தின் ரத்தங்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.  

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார், எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசினார் என்று குற்றச்சாட்டுகளே இதற்கு பிரதானம் என்று கூறப்பட்டது.

அன்வர் ராஜா எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி, 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் தொழிலாளர்துறை அமைச்சராக பதவி வகித்தவர். 2014ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றி பெற்றவர்.

சசிகலாவின் தீவிர ஆதரவாளர், எடப்பாடி அணியில் இருந்து வந்த அவர், சசிகலா விடுதலையான பின்னர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். கட்சிக்குள் இது பெரும் புகைச்சலை எப்போது ஏற்படுத்தும்? எப்போது பூகம்பம் வெடிக்கும் என்ற கணக்காய் அனைவரும் காத்திருந்தனர்.

இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில் நேற்றிரவு எல்லா விஷயத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அன்வர் ராஜா நீக்கப்பட்டு உள்ளார். ராத்திரி நேர அறிவிப்பு ரத்தத்தின் ரத்தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இன்றைய அதிமுக செயற்குழு கூட்டத்தில் சசிகலா ஆதரவு மனநிலையில் யாரும் இருக்கக்கூடாது, பேசக்கூடாது என்பதற்காகவே இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை ராத்திரியில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் அன்வர் ராஜா நீக்கம் கட்சிக்கும் வேறு விதமான விளைவுகளை என்று தெரியாத நிலையே தற்போது உள்ளது. இந் நிலையில் அதிமுகவில் நிலவும் பிரச்னைகள் குறித்து அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: முன்னர் எல்லாம் பகலில் தான் அதிமுகவில் இருந்து நல்லவர்களையும், மூத்த தலைவர்களையும், கட்சி நிர்வாகிகளையும் நீக்கி கொண்டிருந்தனர்.

இப்போது ராத்திரி நேரங்களில் நீக்க ஆரம்பித்து இருக்கின்றனர். நிதானத்துடன் ராத்திரியில் சிலர் கொடுத்த உத்தரவின் பேரின் இப்படி நடந்திருக்கலாம். அன்வர் ராஜா நீக்கம் என்பது அதிமுக அழிவுப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை காட்டுகிறது.

அன்வர் ராஜா நீக்கம் கட்சிக்கு பெரும் இழப்பு. என்னை போன்று எந்த தவறும் செய்யாத, நியாயமான கருத்தை பேசியதற்கு கிடைத்த பரிசு தான். இப்படிப்பட்ட அதிகார வர்க்கத்தை ஒழிக்க வேண்டும் என்று புகழேந்தி கூறி இருக்கிறார்.

எம்ஜிஆர் காலத்து நபர், மூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் என பல முகங்களை கொண்ட அன்வர் ராஜாவின் நீக்கம் என்பது கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா ஆதரவை வெளிப்படையாக அறிவிக்கும் எவருக்கும் இனி இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சொல்லாமல் சொல்லும் அறிவிப்பு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்…!

click me!