
தமிழகப் பாணியில் புதுச்சேரியிலும் பாஜக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
கூட்டணி ஆட்சி
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் கடந்த 10 மாதங்களில் பாஜக தரப்புக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. தற்போதும் வாரிய தலைவர்களை நியமிக்கும் விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக தனித்து போட்டியிட்டது. இத்தேர்தலில் பாஜக 5 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதன்மூலம் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்தது. புதுச்சேரியில் என்,ஆர். காங்கிரஸ் கூட்டணியோடு இருந்தாலும், பாஜக தங்களுக்கென எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பதை அறிய ஆவலாக உள்ளது. இதன்படி புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனித்துப் போட்டி
புதுச்சேரியில் அண்மையில் பாஜக மேலிடத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள நகராட்சி வார்டுகள், கொம்யூன்களில் போட்டியிட தகுதியானவர்களை தேர்வு செய்யும்படியும் மாநில நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடத் தலைவர்கள் வழிகாட்டுதல்களை வழங்கியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், தற்போது புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனும் அதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
"புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பாக நிர்வாகிகள் கருத்துகளை தலைமைக்கு தெரிவித்துள்ளனர். மேலிடமும் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தனித்து போட்டியிடும். அதேவேளையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். இந்த முடிவு ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமைந்த கூட்டணியைக் கட்டுப்படுத்தாது” என்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.