
நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா அணியினர் குதிரை பேரம் நடத்தியதாக இரு தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் ஒட்டுமொத்த தமிழகமே அரண்டு கிடக்கிறது. தமிழக சட்டமன்றம் வார் டெரிட்டரியைப் போல சுள்ளென சுட்டெரிக்கிறது.
கடந்த 14 ஆம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்களின் குதிரைபேரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் நம்பிக்கைவாக்கெடுப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டிய சபாநாயகர், இது குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்தார்.
இதனால் கொந்தளித்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட போது, திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிடுகிறேன் என்று கூறி நீண்ட நெடிய பெயர் பட்டியலை வாசித்தார். என்ன பட்டியல் அது…? வெளியேற்றப்படும் திமுக எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் அது.
ஆனால் அந்தப் பட்டியலில் அவைக்கு வராத மூன்று எம்.எல்.ஏ.க்களின் பெயர்களும் அடங்கியுள்ளது என்பது தான் முதல் சர்ச்சை. பி.டி.ஆர்.தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.மூர்த்தி ஆகியோர் அவையில் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு பிரசன்ட் போட்டு அழகு பார்த்திருக்கிறார் சபாநாயகர்.
துபாய் சென்று சென்னை திரும்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.தியாகராஜனுக்கு இத்தகவலை கழக உடன்பிறப்புகள் தெரிவிக்க என்ன கொடுமையடா சாமி என்று வேதனை பட்டிருக்கிறார் பி.டி.ஆர்.
பொதுவாக சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். யார் யார் வந்திருக்கிறார்கள், எந்த உறுப்பினர் வரவில்லை என்ற முழுத் தகவலும் சபாநாயகரிடம் அளிக்கப்படும்.
இதுவே நடைமுறை. ஆனால் அவையில் யார் இருக்கிறார்கள்..? யார் இல்லை என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக பெயர் பட்டியலை வாசிப்பது சட்டமன்ற மாண்புக்கு பொருந்துமா..!தகுமா….!