
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வந்து பிரச்னைக்குத் தீர்வு கண்டால்தான் போராட்டம் கைவிடப்படும் என சென்னை காசிமேடு பகுதியில் போராட்டம் நடத்தும் மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி படகுகளில் சீன எஞ்சின் பொருத்தி அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள், மீன் பிடிப்பதாக மற்ற மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விசைப்படகு மீனவர்கள், மீன் கிடைக்காமல் வருமானத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் ஏற்கனவே மீன் விற்பனை செய்த பழைய இடத்தில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதிலும் மீனவர்கள் உறுதியாக உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் சென்னை காசிமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மீனவர்கள் மீது தடியடி நடத்தினர்.
ஆனால் தடியடிக்கு எல்லாம் அசராத மீனவர்கள், அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வந்து இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறுவதால், அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்றிருக்கிறார். அவர் சென்னை வந்த பிறகு தான் போராட்டம் நடத்தும் மீனவர்களை சந்திக்க முடியும். ஆனால், எவ்வளவு நேரம் ஆனாலும் அவர் நேரில் வந்து பிரச்னைக்கு தீர்வு கண்டால்தான் போராட்டம் கைவிடப்படும் என்பதில் மீனவர்கள் உறுதியாக உள்ளனர்.