மதமாற்ற அழுத்தம்-மாணவி தற்கொலை.? கிறிஸ்தவ பள்ளி மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு தயங்குவது ஏன்.? பாஜக ஆவேசம்!

By Asianet TamilFirst Published Jan 20, 2022, 10:04 PM IST
Highlights

இது தற்கொலை அல்ல. படு பயங்கரமான கொலை. அந்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்துள்ளது காவல் துறை.

இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் துள்ளி குதித்து நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு, கிறிஸ்தவ பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அண்ணாமலை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏழை விவசாயி மகள் லாவண்யா வயது 17, அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும். நடுநிலையான விசாரணை நடைபெற்று, தவறு செய்தவர், கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். மதமாற்றம் - தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி. ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்! மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்!” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதேபோல நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி தூய இருதய பள்ளியில் படித்த 17 வயது லாவண்யா என்ற அரியலூரை இளம் பெண்ணை பலி வாங்கியிருக்கிறது கட்டாய மதமாற்ற கும்பல். கல்வியின் பெயரால் மதமாற்றம் செய்ய துடிக்கும் கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்கள் கரங்களை ஆக்டோபஸ் போல விரித்து கொண்டே தொடர்ந்து செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதே அரியலூரை சேர்ந்த அனிதா என்ற இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி நீட்டுக்கு எதிராக போராட வைத்து வாழ்க்கையில் விரக்தியடைய செய்து தற்கொலைக்கு தூண்டிய கும்பல் இன்று இந்த பெண்ணின் மரணத்திற்கு வாய் பொத்தி மௌனம் காப்பது ஏன்? இந்த பெண்ணின் உயிர் தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு பொருட்டில்லையா? 

லாவண்யாவை பல நாட்களாக  மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதோடு, அவர்கள் பெற்றோரையும் இந்த மதமாற்ற கல்வி நிறுவனம் வற்புறுத்தியுள்ளது. தன் மத நம்பிக்கையில் திடமாக இருந்த லாவண்யா மாற்று மதம் மாற மறுத்துள்ளார். அதன் காரணமாக அந்த சிறு பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளது தூய இருதய பள்ளி நிர்வாகம். விடுதியில் தங்கி படித்த லாவண்யாவை சமையலறையில் பாத்திரம் கழுவ செய்ததோடு, கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியாக சொல்லப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், இந்த கொடுமை தாங்காமல், லாவண்யா விஷத்தை உட்கொண்ட நிலையில், உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அலட்சியமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. விஷம் உட்கொண்டதை மறைத்து லாவண்யாவை வீட்டுக்கு அனுப்பியுள்ளது பள்ளி நிர்வாகம். வீட்டுக்கு சென்ற லாவண்யாவின் உடல் நிலை மிக மோசமானதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்கே சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாள் அந்த சிறுமி. 

இது தற்கொலை அல்ல. படு பயங்கரமான கொலை. அந்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்துள்ளது காவல்துறை. கைது செய்யப்பட வேண்டியது தூயஇருதய பள்ளியின் நிர்வாகத்தினர்தான். ஆனால், காவல் துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. தமிழக அரசு இன்னும் மௌனம் காப்பது ஏன்? இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் துள்ளி குதித்து நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு, கிறிஸ்தவ பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? ஒரு மாணவியின் மரணத்தில்கூட சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலா? மத சார்பற்ற அரசு என்றால் பெரும்பான்மை மதத்திற்கு எதிராகவும், சிறுபான்மை மதங்களுக்கு வெண்சாமரம் வீசுவதும்தான் என்பது திமுக அரசின் எழுதப்படாத விதியா? அதனால்தான் திமுகவை மதவாத கட்சி என்று அழைக்கிறோம். 

இழந்த உயிருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நீதி வழங்கப்பட வேண்டும். அந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். மதமாற்ற கல்வி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். உடன் நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

click me!