திருச்சி மாநகராட்சி வார்டு பங்கீடு.. எனக்கு 50; உனக்கு 15.. திமுக கூட்டணி கட்சிகளை அலறவிட்ட கே.என். நேரு.!

By Asianet TamilFirst Published Jan 20, 2022, 9:02 PM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. மாநகராட்சி வார்டுகள் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திருச்சி மாநகராட்சித் தேர்தலில் திமுக 50 வார்டுகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய 15 வார்டுகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன. கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இத்தனை சதவீதம் என்று இடங்கள் பிரித்துக் கொடுக்கப்படும். எந்தெந்த வார்டுகள் என்பது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து தேர்தலில் போட்டியிடுவார்கள். ஆனால், இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு இத்தனை சதவீத இடங்கள் என ஒதுக்கவில்லை. கூட்டணி கட்சிகள் மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி இடங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளன. ஆனால், திமுக கூட்டணியில் பல மாநகராட்சிகள், நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரை திமுக முடிவு செய்துவிட்டது. இந்நிலையில் தற்போதுதான் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பணிகளை மாவட்ட அளவில் தொடங்கியுள்ளனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் உள்ளன. திருச்சி மாநகராட்சித் தேர்தலுக்கான பேச்சுவார்த்தையை திருச்சி மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களுமான கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. மேயர் பதவியைக் கைப்பற்ற 33 கவுன்சிலர்கள் தேவை. இந்த முறை மேயர் பதவியைத் தனித்து கைப்பற்றும் வகையில் பெருவாரியான வார்டுகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சியில் 50 வார்டுகளில் போட்டியிட திமுக முடிவு செய்திருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள். எஞ்சிய 15 வார்டுகளை காங்கிரஸ், மதிமுக, சிபிஎம். சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. மாநகராட்சி வார்டுகள் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் கடந்த 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் திருச்சி மேயர் பதவியை தமாகா, காங்கிரஸ் கட்சிகளுக்கு திமுக விட்டுக் கொடுத்தது. ஆனால், இந்த முறை மேயர் பதவியை திமுகவே கைப்பற்றும் நோக்கத்தில் உள்ளது., எனவே, பெருவாரியான வார்டுகளில் போட்டியிட திமுக முடிவு செய்திருக்கிறது. துணை மேயர் பதவியைக் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

click me!