சொத்து வரி உயர்வு- மனசு வந்து செய்யல.. இதான் நம்ம நிலைமை.. புரியாமல் அரசியல் செய்யாதீர்.. முதலமைச்சர் உருக்கம்

Published : Apr 06, 2022, 01:29 PM ISTUpdated : Apr 06, 2022, 01:35 PM IST
சொத்து வரி உயர்வு- மனசு வந்து செய்யல.. இதான் நம்ம நிலைமை.. புரியாமல் அரசியல் செய்யாதீர்.. முதலமைச்சர் உருக்கம்

சுருக்கம்

சொத்து வரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஏழை , எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.  

சட்டமன்றப்‌ பேரவையில்‌ சொத்து வரி சீராய்வு தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர், மாநகராட்சிகள்‌, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ சொத்து வரி பொது சீராய்வு தொடர்பாக கவன ஈர்ப்புத்‌
தீர்மானம்‌ கொண்டுவந்து, எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள்‌, தங்களுடைய கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

நான்‌ அதிக நேரம்‌ எடுத்துக்‌ கொள்ள விரும்பவில்லை. சுருக்கமாக நான்‌ தெரிவிக்க விரும்புவது, இந்த சொத்து வரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை. நான்‌ அதை மனப்பூர்வமாக இங்கே சொல்லிக்‌ கொள்ள விரும்புகிறேன்‌. ஆனால்‌, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்று கூறுகிறபோது, அதைச்‌ சமாளிக்க வேண்டிய கட்டாயம்‌ இந்த அரசுக்கு ஏற்பட்டது. ஏனென்றால்‌, முன்பு உள்ளாட்சி அமைப்புகளுக்குத்‌ தேர்தல்‌ நடைபெறவில்லை. மக்களுக்கான வளர்ச்சித்‌ திட்டங்கள்‌ எல்லாம்‌ தேக்க நிலையில்‌ இருந்தன.

மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள்‌ வருவாய்ப்‌ பற்றாக்குறையால்‌, மக்களின்‌ அன்றாடத்‌ தேவைகளுக்கான பணிகளை நிறைவேற்றுவதில்கூட பல்வேறு சிரமங்கள்‌ ஏற்பட்டன. அதை சோதனையாக சந்தித்துக்‌ கொண்டிருந்தன. ஆனால்‌, இப்போது அனைத்துக்‌ கட்சிகளின்‌ சார்பிலும்‌ உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள்‌ பிரதிநிதிகள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே உள்ளாட்சி அமைப்புகளிலே பொறுப்பேற்றிருக்கக்கூடியவர்கள்‌ அரசிடம்‌ என்ன எதிர்பார்ப்பார்கள்‌? அங்கே ஆற்றவேண்டிய பணிகளுக்கு, திட்டங்களுக்கு நிதியை எதிர்பார்ப்பார்கள்‌. 

ஆகவே, இந்த நிலையிலேதான்‌ மக்களை பாதிக்காமல்‌, குறிப்பாக அடித்தட்டு மக்களை, ஏழை, நடுத்தர வகுப்பு மக்களை பாதிக்காமல்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ வளர்ச்சிப்‌பணிகளை மனதிலே வைத்துக்‌ கொண்டு, சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால்‌, தற்போது நடைமுறைப்படுத்தக்கூடிய சொத்து வரி சீராய்விலே, கட்டடங்களின்‌ பரப்பளவிற்கு ஏற்றவாறு பிரித்து, வரி உயர்வு செய்யக்கூடிய திட்டம்‌ இதிலே
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌, நகர்ப்புறத்தில்‌ மொத்தம்‌ உள்ள குடியிருப்புகளைப்‌ பொருளாதார அடிப்படையில்‌ பார்த்தால்‌ 83 விழுக்காடு மக்களை இந்த வரி விதிப்பு பெரியதாக பாதிக்காது என்பதுதான்‌ உண்மை. ஆகவேதான்‌, பத்திரிகைகளும்‌, ஊடகங்களும்கூட இந்த அரசினுடைய முயற்சியைப்‌ பாராட்டிக்‌ கொண்டுதான்‌ இருக்கிறது. அடிப்படை வசதிகள்‌ செய்து கொடுக்கக்கூடிய கட்டாயம்‌- அதற்கு நிதி ஆதாரம்‌ அவசியம்‌ தேவை” என்றும்‌, “இப்போதுள்ள நிலையில்‌ உள்ளாட்சி அமைப்புகளிடம்‌ இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு எதையும்‌ செய்ய முடியாது என்ற காரணத்தால்‌, இந்த வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும்‌” என்றும்‌ பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளன.

பேரவையில்‌ அமர்ந்திருக்கக்கூடிய உறுப்பினர்கள்‌ அனைவரையும்‌, இந்த அரசின்‌ சார்பிலே பணிவோடு கேட்டுக்‌ கொள்ள விரும்புவது, கட்சி வேறுபாடின்றி நான்‌ சொல்ல விரும்புவது, அரசின்‌ இந்த முடிவுக்கும்‌, மக்கள்‌ நலத்‌
திட்டங்களை, வளர்ச்சித்‌ திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள்‌ நிறைவேற்றிடவும்‌, நம்‌ மாநிலத்தின்‌ ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும்‌ துணை நிற்க வேண்டும்‌ என்பதுதான்‌.மாநில வளர்ச்சியில்‌ எவ்வித அரசியலும்‌ செய்திட வேண்டாம்‌ என்று எதிர்கட்சி மற்றும்‌ தோழமைக்‌ கட்சிகளுக்கும்‌ கேட்டுக்கொள்கிறேன். எதிர்க்கட்சி தலைவர்‌ மட்டுமின்றி, இங்கு அமர்ந்திருக்கக்கூடிய அனைத்துக்‌ கட்சிகளின்‌ சட்டமன்றத்‌ தலைவர்களையும்‌ கேட்டு கொள்வதாக முதலமைச்சர் கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?