
பாரதிய ஜனதா கட்சி தொடக்க நாளான இன்று அக்கட்சி கொடியை நடிகை குஷ்பு தலைகீழாக ஏற்றினார். இதனால் அங்கிருந்த நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்ததுடன் கொடியை கிழே இறக்கி சரி செய்து மீண்டும் ஏற்றி வைத்தனர். இச்சம்பவம் பாஜக அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
80களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு, எதையும் வெளிப்படையாக துணிச்சலாக பேசக்கூடியவர் என்று மக்கள் மத்தியில் பெயரெடுத்தவர் அவர். சில நேரங்களில் ஏதையாவது பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மொத்தத்தில் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் அவர். திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு சென்று பின்னர் அங்கிருந்து நேரெதிர் சித்தாந்தம் கொண்ட பாஜகவின் தஞ்சம் அடைந்துள்ளார். அடிக்கடி கட்சி மாறுவதை குஷ்பு வாடிக்கையாக வைத்திருப்பதால் அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி, சுயநலப் பேர்வழி, கொள்கை இல்லாதவர் என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
இதேபோல் பாஜகவில் சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் மண்ணைக் கவ்வினார். தற்போது அவருக்கு பாஜகவில் தேசிய செயற்குழு சிறப்பு உறுப்பினராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட நேரங்களில் கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் இல்லை என குஷ்பு வருத்தத்தில் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் பாரதி ஜனதா கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு இன்று சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு கொடியேற்றினார். அப்போது கவனக்குறைவால் நடிகை குஷ்பு பாஜக கொடியை தலைகீழாக ஏற்றினார். கொடியில் இருந்த தாமரை இதழ்கள் தலைகீழாகவும் முலைக்காம்பு மேலே இருக்குமாறும் கொடி பறந்தது.
கொடி காற்றில் பறந்த போதுதான் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருப்பதை கண்டு பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குஷ்பு அங்கிருந்து சென்றவுடன் உடனடியாக கொடியை கீழே இறக்கி அதை சரி செய்து மீண்டும் கொடி ஏற்றி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் நடிகை குஷ்பு மற்றும் அவருடன் கலந்து கொண்ட பாஜக தொண்டர்கள் எப்போதும் இல்லாத வகையில் காவி நிற தொப்பி அணிந்திருந்தனர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வெள்ளை நிற தொப்பி அணிததைப்போல பாஜகவினர் சமீபகாலமாக காவி நிற தொப்பியை அணிந்து வருகின்றனர். குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அக்கட்சியின் தலைவர்கள் முதல் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தொண்டர்கள் வரை அனைவரும் காவி நிற தொப்பியை அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்காட்சியை சேர்ந்தவர்கள் ஒரே வடிவிலான சிறப்பு வகை காவி நிற தொப்பியை அணிந்து வருகின்றனர். தொப்பியில் கட்சியின் தாமரை சின்னம் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் கொடியேற்ற வந்த நடிகை குஷ்புவும் தலையில் காவி நிற தொப்பி அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.