பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஒரு 'தமிழின அடையாள மீட்பர்...' மு.க.ஸ்டாலின் பாராட்டு..!

By Thiraviaraj RMFirst Published Nov 6, 2019, 11:42 AM IST
Highlights


பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஒரு 'தமிழின அடையாள மீட்பர்' - 'தமிழின அறிவு மீட்பர்' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ரத்தமும் வியர்வையும் சிந்தி வளர்த்ததில் அடிமட்டத் தொண்டர்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ - அதேபோல அறிவுத் தளத்தில் செயல்பட்டு இந்த இயக்கத்தை வளர்த்ததில் பேராசிரியர்களுக்கும், தமிழாசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு! அதனால்தான் திராவிட இயக்கத்தையே தமிழ் இயக்கம், தமிழர்களின் இயக்கம் என்று சொல்கிறோம். அப்படி கட்சிக்குள் இணையாமலேயே தேர்தல் அரசியலில் பங்கெடுக்காமலேயே இயக்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த எத்தனையோ பேராசிரியர்களில் நெடுஞ்செழியன் அவர்களுக்கும் சக்குபாய் அவர்களுக்கும் நிரம்ப பங்குண்டு என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமாக தெளிவாக தெரிந்து கொண்டிருக்கிறோம்.

பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா, சித்தப்பா ஆகிய இருவரும் தந்தை பெரியாருக்கு நெருக்கமானவர்கள். ஆனால் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய போது இவரது சித்தப்பாவும் தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்கள். அவரது வழியில் வந்த நெடுஞ்செழியன் அவர்களும் இளமை முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு வளர்ந்து வந்துள்ளார்.

திராவிட இயக்கத்துக்குத் தேவையான வரலாறு, அரசியல், தத்துவ நூல்களை எழுதித்தரும் பேராசிரியர்களில் ஒருவராக அவர் வளர்ந்து வந்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக இருந்தாலும் தன்னுடைய அரசியல் அறிவுப் பணியை விடாமல் தொடர்ந்தவர் பேராசிரியர் நெடுஞ்செழியன்.

பொதுவாக சிலர் நல்ல வேலை கிடைத்ததும் இயக்கத்துக்கான பணிகளை மறந்துவிடுவார்கள். ஆனால் நெடுஞ்செழியன் அவர்கள் அதனையும் சேர்த்துச் செய்தவர் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்திய சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை, பக்தி இயக்கங்களும் வைதீக எதிர்ப்பும், தமிழ் எழுத்தியல் வரலாறு, இந்தியப் பண்பாட்டில், தமிழும் தமிழரும், தமிழரின் அடையாளங்கள், சங்ககாலத் தமிழர் சமயம் போன்ற தலைசிறந்த நூல்களை எழுதியவர் நெடுஞ்செழியன். இவை அனைத்துக்கும் மேலாக ஒரு பொய் வழக்கில் கைதாகி சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்படிப்பட்ட நேரத்தில்கூட அஞ்சாத நெஞ்சத்துடன் அந்த வழக்கை எதிர்கொண்டவர் தான் பேராசிரியர் நெடுஞ்செழியன்.

''பொய்வழக்குப் போட்டு

புகழையெல்லாம் தீய்த்து

கைவிலங்கு மாட்டி என்னை

கடுஞ்சிறையில் பூட்டி

வெங்கொடுமை செய்தாலும்

நான் வீழ்ந்துவிட மாட்டேன்.

பங்கமெல்லாம் கண்டு

நான் பயந்துவிட மாட்டேன்.

வஞ்சத்தின் முன்னே

நான் மண்டியிடமாட்டேன்''

- என்று கவிதை எழுதினாரே தவிர பயந்து அஞ்சி நடுங்கி ஒடுங்கிவிடவில்லை நம்முடைய பேராசிரியர். அவர் சிறையில் இருந்தபோதும் சங்ககாலத்தமிழர் சமயம், தமிழரின் அடையாளம், சித்தன்னவாசல் ஆகிய புத்தகங்களைத் தான் எழுதியிருக்கிறார். இதில் தமிழரின் அடையாளம் என்ற நூல் தமிழக அரசின் பரிசையும், சித்தன்னவாசல் என்ற நூல் கலைஞரின் பொற்கிழி விருதையும் பெற்றுள்ளன. இறுதியில் நிரபராதியாக வெளியில் வந்தார்; வந்த பிறகும் சும்மா இருக்கவில்லை.

இதோ, ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்' என்ற பெரிய புத்தகத்தை எழுதி நமக்காக வெளியிட்டு இருக்கிறார். 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று பாரதிதாசன் சொல்வதைப் போல, செயல்படக் கூடியவர்தான் நம்முடைய பேராசிரியர் நெடுஞ்செழியன். அவரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

இங்கு நான் வெளியிட்டு இருக்கும், 'ஆசீவகமும் ஐயனார் வரலாறும்' என்ற இந்த நூல் மிகமிக முக்கியமான தத்துவ நூலாக அமைந்திருக்கிறது. நாள்தோறும் ஏராளமான புத்தகங்கள் வெளிவருகின்றன. கதைகள், கவிதைகள், நாவல்கள், வரலாறுகள் என பல புத்தகங்கள் வெளிவருகின்றன. ஆனால், தத்துவ நூல்கள் மிகமிக குறைவு’’ என அவர் தெரிவித்தார்.

click me!