இனியும் பிரதமர் தாமதிக்கக் கூடாது... விவசாயிகள் போராட்டத்துக்கு ஒரு முடிவு கட்டுங்க... ஸ்டாலின் ஆவேசம்..!

By vinoth kumarFirst Published Jan 26, 2021, 6:32 PM IST
Highlights

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு மட்டும் நாடாளுமன்றத்தில் ஆதரிக்காமல் இருந்திருந்தால், 3 வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு மட்டும் நாடாளுமன்றத்தில் ஆதரிக்காமல் இருந்திருந்தால், 3 வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முகநூல் பதிவில்;- இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளிக்காமல் உதாசீனம் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. பேச்சுவார்த்தை என்ற பெயரால் நாள் கடத்தும் நாடகங்களைத் தான் பா.ஜ.க. அரசு நடத்தியதே தவிர ஆக்கபூர்வமான செயலைச் செய்யவில்லை. இந்திய நாட்டின் 30 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை எதிரிகளாக நினைக்கிறது மத்திய அரசு.

பிரதமர், விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஏன் தீர்வு காண முயற்சி செய்யவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள். வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். வன்முறை சூழுமானால் அது ஒன்றே அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகளும் உணர வேண்டும். ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும்.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு மட்டும் நாடாளுமன்றத்தில் ஆதரிக்காமல் இருந்திருந்தால், 3 வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது என்பதை நெருக்கடியான இந்த நேரத்தில் யாரும் நினைக்காமல் இருக்க முடியாது. இனியும் பிரதமர் தாமதிக்காமல் விவசாயிகளை நேரடியாக அழைத்து அவரே பேச வேண்டும். விவசாயிகளால் நிராகரிக்கப்படும் மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

click me!