செங்கோட்டை மீது ஏறிய விவசாயிகள்.. வதந்தி பரவுவதை தடுக்க இணையதளசேவை துண்டிப்பு.. ஆபரேஷன் ஆரம்பம்.?

By Ezhilarasan BabuFirst Published Jan 26, 2021, 4:33 PM IST
Highlights

போராட்டம் தொடர்பான வதந்திகள் பரவுவதைத் தடுக்க சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகளிலும் முகர்பா சவுக் மற்றும் நாங்லோய் பகுதிகளிலும் அரசாங்கம்  இணையதள சேவையை துண்டித்துள்ளது. அதே நேரத்தில் விவசாயிகள்  தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  

டெல்லியில் விவசாயிகள் செங்கோட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் எனவும்,  உடனே செங்கோட்டையில் இருந்து வெளியேற வேண்டுமெனவும் டெல்லி போலீசார் விவசாயிகளை எச்சரித்துள்ளனர். மேலும் போராட்டம் தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்க டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு சிங்கு எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என ஏற்கனவே விவசாயிகள் அறிவித்திருந்தனர். அவர்களது போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியதுடன் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் 12 மணிக்கு மேல் டிராக்டர் அணிவகுப்பை நடத்தி கொள்ளுமாறு விவசாயிகளுக்கு நிபர்ந்தனை விதித்திருந்தனர். 

ஆனால் இன்று காலையே டெல்லி எல்லைகளில் பதற்றம் நிலவியது.  நாட்டின் தலைநகரின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர்  எல்லைப் பகுதிகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள் திடீரென அத்துமீறிய தடைகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். அவளுக்கு ஒதுக்கிய நேரத்திற்கு முன்னரே விவசாயிகள் பேரணி செல்ல முயன்றதால் குழப்பம் ஏற்பட்டது.  அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் விவசாயிகள் கட்டுக்கடங்கவில்லை. இதனால் போலீசார்  தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர். ட்ராக்டர்களுடன் உள்ளே செல்ல முடியாது என்பதால்,  ஏற்கனவே  கையில் வாள் ஏந்தி போர் வீரர்களை போல  உடை அணிந்து வெள்ளை குதிரைகளில் அமர்ந்து இருந்த விவசாயிகள் தடுப்புகள் விளக்கப்பட்ட உடன் விர்ரென மத்திய டெல்லியை நோக்கி சீறிப் பாய்ந்தனர் 
அவர்கள் மத்திய டெல்லிக்குள் நுழைய ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் திட்டமிட்டு அப்பகுதிக்குச்  நுழைந்தது, பதற்றத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தது.  

போலீசாரின் கடுமையான தடுப்புகளையும் மீறி விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்து, அதன்மீது ஏறி, விவசாய சங்கங்களின் கொடிகளை நாட்டினர். தொடர்ந்து செங்கோட்டையில் முற்றுகையிட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் டெல்லி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கலைக்க தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்து வருகின்றனர். அதே நேரத்தில் விவசாயிகள் சட்ட ஒழுங்கை கையில் எடுக்க வேண்டாம் எனவும் டெல்லி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போராட்டம் தொடர்பான வதந்திகள் பரவுவதைத் தடுக்க சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகளிலும் முகர்பா சவுக் மற்றும் நாங்லோய் பகுதிகளிலும் அரசாங்கம்  இணையதள சேவையை துண்டித்துள்ளது. 

அதே நேரத்தில் விவசாயிகள்  தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கலவரம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட காவலர்களை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த கல்வீச்சு மற்றும் தடியடி மோதலில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐ.டி.ஓ பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

click me!