கோவையில் 2.5 கிலோ மீட்டருக்கு மோடியின் ROAD SHOW.. வழி நெடுக பாஜக செய்த ஏற்பாடுகள் என்ன.?

By Ajmal Khan  |  First Published Mar 18, 2024, 9:28 AM IST

இரண்டு நாள் பயணமாக இன்று கோவைக்கு வரும் பிரதமர் மோடி, இன்று மாலை கோவையில் நடைபெறும் வாகன பேரணியில் கலந்துகொள்ளவுள்ளார். இதனையடுத்து இரவு கோவையில் தங்கியபின் நாளை சேலம் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.


கோவைக்கு வரும் மோடி

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதன் காரணமாக அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.  இந்த நிலையில் பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் தனது  முதல் பிரச்சாரத்தை கோவையில் இன்று மாலை தொடங்க உள்ளார். கோவையில் நடைபெற உள்ள வாகன பேரணியானது சுமார் இரண்டரை கிலோ மீட்டருக்கு நடைபெறுகிறது.

Latest Videos

undefined

 இன்று மாலை 5.30 மணி அளவில் கோவைக்கு வரும் மோடி அங்கிருந்து கார் மூலமாக மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் அருகே வருகிறார்.  இதனையடுத்து மாலை 5:45 மணிக்கு வாகனப் பேரணியானது தொடங்குகிறது.  இந்த பேரணியானது பூ மார்க்கெட், வடகோவை மேம்பாலம், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி சாலை, வழியாக ஆர் எஸ் புரம் தலைமை அஞ்சல் நிலையம் வரை நடைபெறுகிறது.  

வழி நெடுக கலை நிகழ்ச்சிகள்

சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நடைபெறும் இந்த வாகன பேரணியில் பாஜகவினர் 2 லட்சத்துக்கு மேல் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக கோவையில் முக்கிய இடங்கள் ரெட் ஜோனாக மாற்றப்பட்டு மத்திய அரசு பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடியின் வருகைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் வானதி சீனிவாசன் கூறுகையில்,

மோடி வாகன பேரணியின் போது ஆங்காங்கே சிறு மேடையில் சமுதாய தலைவர்கள் உட்பட சில பேரை அமர வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.  பிரதமர் வரும் பாதையில் இருபுறமும் பொதுமக்களும் பங்கேற்கலாம் எனவும் எந்தவித கட்டுப்பாடுகள் யாருக்கும் இல்லையென தெரிவித்தார்.  தனிப்பட்ட பாஸ் இல்லையெனவும், பிரதமரை அருகிலிருந்து பார்க்க கோவை மாநகர மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். 

சேலத்தில் பொதுக்கூட்டம்

மேலும் பாரம்பரிய முறைப்படி கலை நிகழ்ச்சிகள் மற்றும் கோவை மண்டல பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கொண்டு கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளாதகவும் தெரிவித்தார். கோவையில் வாகன பேரணியை மாலை 6.50 மணிக்கு முடிக்கும் பிரதமர் மோடி இரவு கோவை சர்க்யூட் ஹவுஸில் தங்குகிறார். நாளை காலை கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு செல்கிறார்.

அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு நாளை மதியம் ஒரு மணி அளவில் சேலம் மாவட்டம் ஜெகன் நாயக்கன்பட்டிக்கு வந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.  பிரதமரின் கோவை வருகை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு படையினர், தேசிய பாதுகாப்பு படை, மத்திய உளவு பிரிவு மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

நேரம் பார்த்து செக் வைத்த ஆளுநர்... பொன்முடிக்கு ஆதரவாக களத்தில் இறங்கும் திமுக- என்ன செய்ய போகிறது தெரியுமா.?

click me!