
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.
ஓகி புயலால் குமரி மாவட்டம் பேரிழப்புகளை சந்தித்தது. மீனவர்கள் மாயம், மாவட்டம் முழுக்க வெள்ளம், விவசாயம் பாதிப்பு, உயிரிழப்புகள் என ஓகியில் சிக்கி குமரி மாவட்டமே சின்னாபின்னமானது. ஆயிரக்கணக்கான தென்னை, ரப்பர், வாழை மரங்கள் சாய்ந்தன. நெற்பயிர்கள் சேதமடைந்தன. மீனவர்களும் விவசாயிகளும் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர்.
ஓகி புயலில் சிக்கி பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள மீனவர்களை மீட்டு தமிழகம் கொண்டுவரும் பணிகள் நடந்துவருகின்றன.
இந்நிலையில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்துவருகிறார். ஓகி புயலால் கடுமையான பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்திருக்கும் மீனவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளிடம் கோரிக்கைகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வுக்கூட்டம் நடத்திவருகிறார். இந்த கூட்டத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி விளக்கிக் கூறினார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது, நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு நிவாரண நிதியாக மத்திய அரசு 4047 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.