
தானே மதுரை ஆதீனம் எனக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் மனு செய்த நித்யானந்தாவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்தது. இதை அடுத்து மனுவை வாபஸ் பெற்று கொண்டார் நித்தியானந்தா.
ஏற்கெனவே மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ள நிலையில், தன்னை மதுரை ஆதீனம் எனக் குறிப்பிட்டு மனு செய்தார் நித்யானந்தா. நித்தியானந்தாவின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மேலும், அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெறாவிட்டால், நித்தியானந்தா மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
நித்தியானந்தா, சட்டவிரோத ஆவணங்களின் அடிப்படையில் தன்னை மதுரை ஆதீன மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மதுரை ஆதீன விவகாரத்தில் தலையிடவும், மடத்திற்குள் நுழையவும் நித்யானந்தாவுக்கு ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நித்தியானந்தா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது. அதில், தன்னை 293வது ஆதீனம் என நித்தியானந்தா குறிப்பிட்டிருந்தார்.
நித்தியானந்தாவின் இந்தச் செயலுக்கு, நிதிபதி கண்டனம் தெரிவித்தார். இவ்வாறு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதை அடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
ஆதின மடத்துக்குள் நுழையக் கூடாது என்று ஏற்கெனவே நித்தியானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை இனியும் தொடரும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். தானே ஆதீனம் என்று தனக்குத்தானே குறிப்பிட்டு நித்தியானந்தா நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்து, அலப்பறையில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.