
குஜராத், இமாச்சலில் ஆட்சியமைக்க முடியாவிட்டாலும் மக்களின் ஆதரவு காங்கிரஸிற்கு உள்ளது. இன்னும் நமது “கை”யை பலப்படுத்துவோம் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சலில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் காங்கிரஸின் வாக்குவங்கி கணிசமாக அதிகரித்துள்ளது. 150 தொகுதிகளை இலக்காக கொண்டு பணியாற்றிய பாஜகவால் 99 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
ஆனால், கடந்த 2012 சட்டமன்ற தேர்தலில் 61 தொகுதிகளை மட்டுமே வென்ற காங்கிரஸ், இந்த முறை 77 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக, பிரதமர் மோடியின் சொந்த தொகுதி மற்றும் சொந்த மாவட்டத்தில் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் இந்த தேர்தல் அக்கட்சிக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இந்நிலையில், குஜராத் மற்றும் இமாச்சல் தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தை வளர்ச்சியடைய செய்ததாக பிரதமர் மோடி கூறிவருவது பொய் என்பது தேர்தல் முடிவின் மூலம் நிரூபணமாகியுள்ளது. குஜராத்தில் மோடி என்ற தனிமனிதரின் பிம்பத்தின் மீதான தாக்கம் குறைந்துள்ளது.
குஜராத் மற்றும் இமாச்சலில் ஆட்சியமைக்க முடியாவிட்டாலும் மக்களின் ஆதரவு காங்கிரஸிற்கு அதிகமாக உள்ளது. பாஜகவினர் என்ன மாதிரியான எதிர்மறை உக்திகளையும் சக்திகளையும் பயன்படுத்தினாலும் சரி. காங்கிரஸார் அன்புடனும் நட்புடனும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். 2 மாநில தேர்தலின் முடிவு வெறும் ஆரம்பம்தான். காங்கிரஸின் “கை”யை இன்னும் வலுவடைய செய்ய கட்சியினர் பணியாற்ற வேண்டும் என ராகுல் காந்தி பேசினார்.