ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பி பாரக்க வைத்த மோடி- பவார் சந்திப்பு.. பின்னணி இதுவா? அதிரும் அரசியல் களம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 17, 2021, 3:31 PM IST
Highlights

முன்னூறு எம்பிகளை கொண்ட ஒரு கட்சியை எதிர்த்து போட்டியிட்டால் என்ன முடிவுகள் வரும் என்று எனக்கு நன்றாகவே தெரியும், ஆக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தான் இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து மோதல் நடைபெற்று வரும்  நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இரு தலைவர்களுக்குமிடையேயான சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் இந்த சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகிறது. முக்கிய அரசியல் விவாதத்திற்கும் இந்த சந்திப்பு வழிவகுத்துள்ளது. 

கடந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவுக்கு கை கொடுத்ததின் காரணமாக அங்க சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது. பாஜக சரத் பவாரின் தேசியவாத காங்கிரசின் ஆதரவு பெற முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது. இதனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதனால் அந்தப் பகை இரு கட்சிகளுக்கும் இடையே நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இதற்கிடையே மகாராஷ்டிராவில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய கட்சியான காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படேல், அஜித் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ்  தலைவர் சரத்பவார் குறித்து மிகக் கடுமையாக விமர்சித்தார். அந்த விமர்சனத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கும் இடையேயான வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் நானா படேல் குறித்து அக்கட்சியின் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் பவார் புகார் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் 2024 இல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணி அமைக்கப் சரத்பவார்  திட்டமிட்டு வருகிறார் எனவும் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பவார் முன் நிறுத்தப்படுவார் என்றும் தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அரசியல் வியூக வல்லுனரான பிரசாந்த் கிஷோர் பவாரை இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த அத்தனை நிகழ்வுகளும் சரத் பவாரை மையமாக கொண்டு நடந்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்ற யூகச் செய்திக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

முன்னூறு எம்பிகளை கொண்ட ஒரு கட்சியை எதிர்த்து போட்டியிட்டால் என்ன முடிவுகள் வரும் என்று எனக்கு நன்றாகவே தெரியும், ஆக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தான் இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.அதேபோல எந்த ஒரு கூட்டணிக்கும் தலைமையேற்க தனக்கு திட்டமில்லை என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் சரத்பவார் இடையே நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் சந்திப்பதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!