
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி ஆய்வு செய்ததால்தான் பிரதமர் மோடியும் ஆய்வு செய்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
ஓகி புயலால் குமரி மாவட்டம் பேரிழப்புகளை சந்தித்தது. மீனவர்கள் மாயம், மாவட்டம் முழுக்க வெள்ளம், விவசாயம் பாதிப்பு, உயிரிழப்புகள் என ஓகியில் சிக்கி குமரி மாவட்டமே சின்னாபின்னமானது.
ஆயிரக்கணக்கான தென்னை, ரப்பர், வாழை மரங்கள் சாய்ந்தன. நெற்பயிர்கள் சேதமடைந்தன. மீனவர்களும் விவசாயிகளும் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர்.
ஓகி புயலில் சிக்கி பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள மீனவர்களை மீட்டு தமிழகம் கொண்டுவரும் பணிகள் நடந்துவருகின்றன.
இதற்கிடையே ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, கடந்த 14ம் தேதி பார்வையிட்டார். குமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியில் மீனவ மக்கள் உட்பட பல தரப்பினரையும் சந்தித்து குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். மேலும் மீனவர்களுக்காக பாராளுமன்றத்தில் காங்கிரஸின் குரல் ஓங்கி ஒலிக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். லட்சத்தீவு, கேரளா, குமரி மாவட்டம் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்.
பிரதமர் மோடியின் இந்த ஆய்வை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டதால்தான் பிரதமர் மோடியும் பார்வையிடுகிறார் என திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.