கோவில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதை தடுங்கள்.. இந்து அறநிலைத்துறை ஆணையர், நில நிர்வாக ஆணையருக்கு கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 12, 2021, 12:09 PM IST
Highlights

அதேப்போல், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்காமல் விட்டதால்  சமூக விரோதிகள் சிலர் கோயில் சொத்துக்களை தங்களது பெயருக்கு பதிவு செய்தும், பட்டா மாற்றியும் அபகரித்து கொண்டனர் 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை பத்திரபதிவு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், நில நிர்வாக ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்கள், வருவாய்த்துறை தமிழ் நில பதிவுகளோடு ஒப்பீடு செய்து 3 இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, முழுமையாக ஒத்து போகும் இனங்கள், பகுதியாக ஒத்து போகும் இனங்கள், புதிய இனங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதில், முழுமையாக ஒத்து போகும் இனங்கள் அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு பகுதி ஒத்து போகும் இனங்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், இதன் மூலம் அறநிலையத்துறை கோயில் நிர்வாகிகள் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுதாகவும் ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டம் மற்றும் மென்பொருள் 2.0 இணையளத்தை இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்களை சான்று பார்த்து ஆய்வு செய்து தெளிவுப்படுத்தி கொள்ள முடியும் எனவும், தற்போது, இணைப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. விரைவில் ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்துடன் இணைப்பு நடைமுறை அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழ்நிலம் பதிவுகளோடு முழுவதுமாக ஒத்தும் போகும் கோயில் இனங்கள் ‘டி’ என்று குறிப்பிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோடு,  இதன் மூலம் சார்பதிவாளர்கள் முழுமையாக ஒத்து போகும் ஆவணங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும், 

கோயில் நிலங்களை போலியான ஆவணங்களை தயார் செய்து பதிவு செய்வதை தடுக்க முடியும் எனவும், எனவே, இது தொடர்பாக தேசிய தகவல் மையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேணடும், மேலும், இதற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேப்போல், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்காமல் விட்டதால்  சமூக விரோதிகள் சிலர் கோயில் சொத்துக்களை தங்களது பெயருக்கு பதிவு செய்தும், பட்டா மாற்றியும் அபகரித்து கொண்டனர் எனவும், எனவே இதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நில நிர்வாக ஆணையருக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கடிதம் எழுதியுள்ளார்.
 

click me!