
இந்தியாவில் பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடுவரின் சொத்துக்களை முடக்குவதற்கான மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பியோடுவது வாடிக்கையாகிவிட்டது. வங்கிகளில் 9000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பியோடிவிட்டார்.
குஜராத் வைரவியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இவ்வாறு இந்தியாவில் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தொழிலதிபர்கள் தப்பியோடுவதால், அந்த கடன் பணத்தை திரும்ப பெற முடியாததால், வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடுவரின் சொத்துக்களை முடக்கி அவற்றை பறிமுதல் செய்து கடனை திருப்பி செலுத்த ஏதுவாக நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னர், இந்த அவசர சட்டம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.