
“ஆளுநர் ஒன்றும் கிழவர் அல்ல” என அந்த உரையாடலில் பேசியிருக்காங்க, இவருக்கும் அதற்க்கு சம்பந்தம் இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் வலுவாக இருக்கு, இந்த ஆளுநர் எங்களுக்கு வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைக்கும் செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஆளுநரையும் சம்பந்தப்படுத்தி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆளுநர் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்றும், மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்பப் பெற வேண்டும் என்று இன்று (ஏப்ரல் 22)குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், நிர்மலா தேவியின் செல்போன் உரையாடல் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், "தனது மாணவிகளுடன் திருமதி நிர்மலா தேவி நடத்திய உரையாடலில் இருந்து இத்தகைய செயல்களுக்கு அப்பாவி இளம்பெண்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சி இது முதல் முறையல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் அதிகாரிகளின் காம வேட்கைகளைப் பற்றி ‘மிகுந்த கவனத்துடன்’ அவர் அந்த இளம் பெண்களிடம் பேசியிருக்கும் விதமும், “ஆளுநர் ஒன்றும் கிழவர் அல்ல” என்பது போன்ற தனிப்பட்ட சொல்லாடல்களும் அவர்களின் திட்டங்களை வெளிப்படுத்துவதாக அமைகின்றன" என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நடவடிக்கைகளில் தற்போதைய ஆளுநர், அவரது அலுவலகம், உயர்கல்வித் துறை, தமிழ்நாட்டின் சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பலருக்கும் இதில் பங்கிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வலுவான வகையில் எழுந்துள்ளது" என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
"தென்னக மாநிலம் ஒன்றைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர் மீது பாலியல் ரீதியான தவறான செயல்பாடு குறித்த புகார் ஒன்று எழுந்துள்ளதாகவும், அந்தப் புகாரின் மீது மத்திய உள்துறை அமைச்சகம் விசாரித்து வருவதாகவும் சில ஊடகங்களில் ஒரு சில வாரங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாயின. அதே நேரத்தில், தனக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட அதிகாரங்களின் வரம்பை மீறிய வகையில் அரசுப் பதவிகளுக்கு மிகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பாரபட்சமான முறையிலும் நியமனங்களை செய்து வந்துள்ளதையும் எங்களால் காண முடிந்தது. இவை அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது, வேறு சில ‘பங்களிப்பு’களுக்குப் பிரதிபலனாக ‘தகுதி, திறமை ஆகியவற்றை மீறிய வகையில்’ இத்தகைய நியமனங்கள் அனைத்தும் நடைபெற்றுள்ளன என்ற சந்தேகமும் மக்களின் மனதில் எழுந்துள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"இத்தகைய விசாரணையை முறையாக மேற்கொள்ள உதவும் வகையில் தற்போதுள்ள ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டியது அவசியமாகும். ஆளுநர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது சந்தேகத்திற்கு உரியவரே (குற்றச்சாட்டில் இருந்து) தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஒரு விசாரணை கமிஷனை நியமித்துள்ளதாகவே பரவலாக கருத்து நிலவுகிறது. எனவே ஆளுநர் நியமித்துள்ள இந்த கமிஷன் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்.ஆளுநரின் அலுவலகமே இத்தகைய சச்சரவில் சிக்கிக் கொண்டுள்ளது என்பதும் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.எனவே குடியரசுத் தலைவர் அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆளுநர் பதவியின் பெருமையை நிலைநாட்ட வேண்டும்" என்று இவ்வாறு அதில் கூறியுள்ளார்.