
12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கத்துவாவில் ஆசிபா என்ற சிறுமியை 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் தேசிய அளவில் வலுத்தன. இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.எம்.எஃப் தலைவரே கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதன்படி, போக்ஸா சட்டம், இந்திய தண்டனையியல் சட்டம், ஆதாரச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவதற்கு இந்த அவசரச் சட்டம் வழிவகுக்கும். இந்த அவசரச் சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் போக்ஸோ சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.